» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஷாரூக்கான் அதிரடி: முஷ்டாக் அலி கோப்பை அரைஇறுதிக்கு தமிழக அணி முன்னேற்றம்

புதன் 27, ஜனவரி 2021 10:28:59 AM (IST)முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் முடிந்து கால்இறுதிசுற்று நேற்று தொடங்கியது. ஆமதாபாத்தில் இரவில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இமாச்சல பிரதேசத்தை சந்தித்தது. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இமாச்சலபிரதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. கேப்டன் ரிஷி தவான் 35 ரன்களும், அபிமன்யு ராணா 28 ரன்களும் எடுத்தனர். தமிழக வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், முகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி ஒரு கட்டத்தில் ஜெகதீசன் (7 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (2 ரன்) உள்பட 5 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை 66 ரன்னுக்குள் இழந்து தடுமாறியது. இதன் பின்னர் பாபா அபராஜித்தும், ஷாரூக்கானும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். ஷாரூக்கான் அதிரடியாக ஆடி நெருக்கடியை குறைத்தார். இறுதியில் அபராஜித் பந்தை சிக்சருக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்தார். 

தமிழக அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. பாபா அபராஜித் 52 ரன்களுடனும் (45 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாரூக்கான் 40 ரன்களுடனும் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இதே மைதானத்தில் இன்று நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் அரியானா-பரோடா (பகல் 12 மணி), ராஜஸ்தான்-பீகார் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

வெளியேறியது கர்நாடகா 

முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா, பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதில் முதலில் பேட் செய்த கர்நாடகா பஞ்சாப்பின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரமன்தீப்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. சிம்ரன் சிங் 49 ரன்களும், கேப்டன் மன்தீப் சிங் 35 ரன்களும் விளாசி அவுட் ஆகாமல் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir Products
Nalam PasumaiyagamThoothukudi Business Directory