» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பத்மஸ்ரீ விருதுக்கு தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா தேர்வு: 18 ஆண்டுகால உழைப்புக்கு அங்கீகாரம்!!
புதன் 27, ஜனவரி 2021 10:25:07 AM (IST)
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனது 18 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா கூறியுள்ளார்.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் 30 பதக்கங்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சென்னையில் வசித்து வந்தாலும் இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் யாக்கோபுரம் ஆகும். பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது குறித்து 35 வயதான அனிதா கூறியதாவது:- மத்திய அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குடும்பத்தினரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இது போன்ற விருதை பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.
அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து நான் அர்ஜூனா விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும். அர்ஜூனா விருது பெரும்பாலும் தனிநபர் போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படுவதால் குழு போட்டியில் ஆடுபவர்களுக்கு வாய்ப்பு குறைவு என்று சொல்வார்கள். ஆனாலும் விருது கிடைக்கிறதோ இல்லையோ? நீ விண்ணப்பிப்பதை மட்டும் நிறுத்தக்கூடாது, தொடர்ந்து முயற்சி செய் என்று குடும்பத்தினர் ஊக்கப்படுத்துவார்கள்.
அதன் பிறகு ‘கூடைப்பந்து விளையாட்டில் நிறைய வெற்றிகளை குவித்து இருக்கிறாய். நீ ஏன் பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சிக்கக்கூடாது’ என்று சில நலம்விரும்பிகள் கூறினர். இதைத் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சித்தேன். தமிழக அரசின் பரிந்துரையோடு தற்போது இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகால எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு முறையும் விருது கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்தேன். அந்த விடா முயற்சிக்கு கடவுள் அளித்த பரிசு தான் இது.
இந்த விருது கிடைத்ததற்கு குடும்பத்தினர் அளித்த ஊக்கமும், ஆதரவும் தான் முக்கிய காரணம் என்று சொல்வேன். ஏனெனில் பெண்கள் விளையாட்டில் கால்பதித்து சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வெற்றிக்கனியை பறிக்க பல தடைகளை கடக்க வேண்டியது வரும். எல்லா வகையிலும் எனது குடும்பத்தினரும், பயிற்சியாளரும் பக்கபலமாக இருந்தனர். இந்த விருதை மறைந்த எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். இது அவரின் கனவும் தான்.
6-ம் வகுப்பில் இருந்து கூடைப்பந்து விளையாடி வருகிறேன். தற்போது ரெயில்வே அணிக்காக விளையாடுகிறேன். கூடைப்பந்து போட்டிக்காக எனது பங்களிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். கிரிக்கெட் போன்று கூடைப்பந்து விளையாட்டையும் தொழில்முறை போட்டியாக கொண்டு வர வேண்டும். அதாவது ஐ.பி.எல். போன்று கூடைப்பந்திலும் லீக் வடிவிலான போட்டிகளை அதிக அளவில் நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நம் நாட்டில் கூடைப்பந்து விளையாட்டு இன்னும் வளர்ச்சி அடையும்.
இளம் வீராங்கனைகளுக்கு நான் சொல்ல விரும்புவது, அர்ப்பணிப்பு, விடா முயற்சியோடு அடம்பிடித்து செய்ய வேண்டும். அப்போது தான் இலக்கை அடைய முடியும். அது மட்டுமின்றி பெற்றோர் ஆதரவு மிகவும் அவசியம். என்னால் சாதிக்க முடியும் என்று பெற்றோரை சமாதானப்படுத்த வேண்டும். எனது குடும்பத்தினர் ஆதரவு இருந்ததால் தான் இன்னும் என்னால் தொடர்ந்து விளையாட முடிகிறது.கூடைப்பந்து போட்டிக்கு பயிற்சியாளராவது, அகாடமி தொடங்கி இளம் வீராங்கனைகளுக்கு கற்றுக்கொடுப்பது எனது வருங்கால லட்சியமாகும். இவ்வாறு அனிதா கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரவி சாஸ்திரி!!
செவ்வாய் 2, மார்ச் 2021 5:47:16 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)
