» செய்திகள் » சிறப்பு பார்வை

Share

தினம் ஒரு போராட்டம்: 'என்று தீரும் எங்கள் தண்ணீர் பஞ்சம்!'

ஜி. ராஜா | வியாழன் 15, ஜூலை 2010 7:27:39 PM (IST)



கோவில்பட்டியில் பெண்ணை கொடுக்க பயப்படுகின்றனர் பெண் வீட்டினர். ஒரே காரணம் தண்ணீர் பஞ்சம். இன்று அல்ல நேற்று அல்ல கடந்த 30 வருடமாக இதே நிலைதான்.

கோவில்பட்டி 1964ம் ஆண்டு பஞ்சாயத்தில் இருந்து நகராட்சியாக மாறியது. பஞ்சாயத்து நிர்வாகம் இருந்தபோது கோவில்பட்டிக்கு தோப்பாளம் பந்தோட்டம், மந்தித்தோப்பு மற்றும் சுப்பிரமணியபுரத்தில் இருந்து 3 அடிபம்புகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டது. 1972ல் தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது நகராட்சியாக மாறிய கோவில்பட்டிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் ரூபாய் ஒரு கோடியே எட்டு லட்சம் ஆயுள் காப்பீட்டு கழக கடன் உதவியுடன் சீவலப்பேரி-கோவில்பட்டி குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது கோவில்பட்டியில் 22 வார்டுகள் மட்டுமே இருந்தன.

பின்னர் கயத்தார், சீவலப்பேரி, கே.கோபாலபுரம், இடைசெவல் உள்ளிட்ட கோவில்பட்டி வரும் வழியில் உள்ள கிராமங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து தண்ணீர் பிரித்து கொடுக்கப்பட்டது. அதன் பின் இந்த திட்டத்தின் பெயரை சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயரில் மாற்றி அமைக்கப்பட்டு, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டது.

இதனால் கோவில்பட்டிக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தது. அதே போல் கோவில்பட்டியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வார்டுகள் அதிகரித்து 36 ஆகின. இதனால் நகரில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது நகராட்சி நிர்வாகத்திற்கு பலப்பரீட்சையாக அமைந்தது.

இந்த நிலையில் கடந்த 1972ம் ஆண்டில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களின் ஆயுள் காலம் சுமார் 30 வருடங்கள் மட்டுமே என அதனை தயாரித்த கம்பெனியே கூறியுள்ளது. ஆனால் கோவில்பட்டிக்கு வரும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் ஆகின்றன. குழாய்களின் ஆயுள் முடிந்து 8 ஆண்டுகள் ஆவதால் தற்போது ஆங்காங்கே வெடிப்பு ஏற்படுகிறது. இதனால் கோவில்பட்டிக்கு வரும் குடிநீரின் அளவும் குறைவாக உள்ளது.

முதலில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்பட்ட குடிநீர், 3 நாட்களுக்கு ஒரு முறை, 6 நாட்களுக்கு ஒரு முறை என்று தற்போது ஒரு மாதத்திற்கு ஒரு முறையே வழங்கப்படுகிறது. தற்போது நோய்கள் அனைத்தும் தண்ணீர் மூலமே பரவுகின்றன. இந்த நிலையில் மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை எத்தனை நாள் தான் சேமித்து வைக்க முடியும் என கோவில்பட்டி மக்கள் புலம்புகின்றனர்.

கடந்த காலத்தில் குடிநீர் பிரச்சனையை மையமாக வைத்து போராடிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தற்போது நகராட்சி சேர்மன் பதவியை கையில் வைத்துள்ளது. ஆனால் கடந்த காலத்தை விட மோசமாக மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. மேலும் குடிநீர் வழங்கும் நேரத்தில் வசதி உள்ளவர்கள் மோட்டார் வைத்து உறிஞ்சி விடுகின்றனர். இதனால் கடைகோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பது எட்டா கனியாக உள்ளது.

மேலும் மின்தடை உள்ளிட்ட காரணங்களை காட்டி நள்ளிரவு நேரங்களில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பாதுகாப்பு இல்லை என பெண்கள் கூறினாலும் அதற்கு சரியான பதில் சொல்ல நகராட்சி தயாராக இல்லை. மரங்கள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால் மழை குறைவு, இதனால் அடிபம்புகளிலும் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் கோவில்பட்டி பகுதி மக்கள் 'தண்ணீர் தண்ணீர்' என்று அலைய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிலர் வாடகை டிராக்டர் மூலம் ரூபாய் 200க்கும் அதிகமாக கொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர். இந்த நிலையில் காவல் துறை குடியிருப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு போதிய குடிநீர் வரவில்லை. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக கோவில்பட்டிக்கு தனியாக இரண்டாவது பைப் லைன் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு தற்போது அரசு சார்பில் ரூபாய் 80 கோடி ஒதுக்கப்படுவதாக கடந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது. இதற்கு கோவில்பட்டி மார்க்சிஸ்டு கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

எனவே கோவில்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான இரண்டாவது பைப் லைன் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads