» செய்திகள் » சிறப்பு பார்வை

Share

சர்வதேச விதிகளை மதிக்காத இலங்கை: தனி ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு!

புதன் 19, மே 2010 12:10:43 PM (IST)

பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் பிரான்சிஸ் பாயில். இவர் அமெரிக்காவின் சட்ட மாமேதைகளில் ஒருவர். சிகாகோ, இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர்.

இவர் மனித உரிமைகள்  மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து பல்வேறு நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சனைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தர பாடுபட்டு வருகிறார். விடுதலை புலிகள் மற்றும் தமிழீழம் குறித்து இவரது கருத்துக்களில் சில...

இலங்கையில் விடுதலை புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு ராஜபக்ஷே தமிழீழ மக்களை அடியோடு ஒழிக்க பார்க்கிறார். இலங்கை அரசு எவ்வித சர்வதேச விதிகளையும் மதிப்பதில்லை. இந்தியாவும் தட்டிக் கேட்பதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு, கண்டிப்பாக ஈழ மக்களின் மனசாட்சியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்வார்கள். பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும்.

இலங்கையில் இனப்படுகொலைக்கு பிறகு அங்கு எங்கே தமிழர் தலைவர்கள் இருக்கிறார்கள்? எல்லோருமே வெளியில்தானே இருக்கிறார்கள். இலங்கைக்கு அவர்களால் போகத்தான் முடியுமா? இந்த சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதை தவிர வேறு வழியிருக்கிறதா? ஜனநாயக முறையில் உறுப்பினர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஒரு புதிய பாதையில் இயக்கம் அடி போடுகிறது.

தமிழீழ அரசு மூன்று நிலைகளில் இருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒன்று, முழு சுதந்திர நாடு என்று பிரகடனம். இதுதான் தமிழீழ மக்களின் அதன் தலைவர்களின் ஆசை. அடுத்தது, அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றான போர்த்தோ ரிக்கோ நாடு போன்ற அமைப்பு. இது சுதந்திர நாடு; அதேசமயம் அமெரிக்க கூட்டாட்சியின் கீழ் வரும். மூன்றாவது, இலங்கை அரசின் கீழ் அதன் ஆளுமைக்கு முழுவதும் உட்பட்ட சுதந்திர மாகாணம்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமே. அந்த வகையில் இலங்கையில் பிரபாகரன் சரித்திரம் முடிந்த பின்பும்கூட வன்மம் பாராட்ட வேண்டாமே... ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை பழைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். மாறிவரும் ஜியோ-பொலிடிகல் அமைப்பில் சீனாவும், இலங்கையும் சேர்ந்தால் அது ஆபத்து. தனி ஈழம் இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும். நான் அரசியல்வாதி அல்ல; வழக்கறிஞர். ஐரிஷ் இனத்தவன்... ஈழத்தமிழன் கூட இல்லை. ஆனாலும், ஈழத்தமிழர்களின் வலி தெரியும். தயவு செய்து இந்தியா இதில் தலையிட்டு தமிழீழம் மலர உதவ வேண்டும்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads