» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

கொரோனா வைரஸை தாமிர உலோகங்களால் கொல்ல முடியும்: ஆய்வு சொல்கிறது

ஞாயிறு 22, மார்ச் 2020 7:10:41 PM (IST)தாமிர உலோகத்தை மருத்துவமனைகளில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கொல்ல முடியும் என்று பிரபல ஆங்கில இணையதளம் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது. 

இந்தியா டைம்ஸ் என்ற இணையதளத்தில் வந்துள்ள கட்டுரை: கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இதற்கு முன்பு கண்டறிந்திராத அதிவேக விகிதத்தில் பரவி வருகின்ற நிலையில் நமது கைகளை அடிக்கடி கழுவுவது பற்றியும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.  ஆனால், இது தொடர்பாக நமது மனதில் ஒரு சிந்தனை நிச்சயமாக உதித்திருக்கக்கூடும்.  இந்த பொதுவான மேற்பரப்புகளால் வைரஸ்கள் (நச்சுயிரிகள்) மற்றும்  பாக்டீரியாக்கள் அவ்விடங்களில் சேர்வதை ஏன் எதிர்த்து செயல்பட இயலவில்லை?

இத்தகைய நோய்களை விளைவிக்கும் கூறுகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மேற்பரப்புகளை உருவாக்கி அதன்மூலம் நம் அனைவரையும் பாதுகாப்பாக வைப்பதற்கு ஆராய்ச்சியாளர்களை எது தடுக்கிறது? என்ற கேள்வியும் எழக்கூடும். வைரஸ்களையும், பாக்டீரியாக்களையும் அதனோடு தொடர்புகொண்ட ஒருசில நிமிடங்களுக்குள்ளேயே அழிக்கின்ற ஒரு பொருள் உண்மையிலேயே  இருக்கிறது என்பதை அறிய நீங்கள் நிச்சயமாக வியப்பில் மூழ்கக்கூடும்.  தாமிரம் என்பதே  அந்த பொருள். 

அந்த காலங்களில் வீட்டிலுள்ள அறைகலன்களை, பிற பொருட்களை இன்றைய காலகட்டத்தில் நீங்கள் பார்த்தீர்களானால், அவைகளுள் பெரும்பான்மையானவை ஸ்டீல் அல்லது அதிக விலையில்லாத வேறு பிற மூலப்பொருட்களால் செய்யப்பட்டதாக இருப்பதை அறிவீர்கள். தாமிர கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மிகப்பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பதில் தோல்வியடைந்தாலும் கூட, வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஸ்டீலால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தரைப்பரப்புகளையே பார்க்க முடிகிறது.
  
தாமிரத்தின் இயல்புகள் எதுவும் இந்தியாவிற்கு புதிதானதல்ல; கடந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் தாமிரம், செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுகின்ற நீரை அருந்துவதுண்டு (இன்றைய நாளிலும் கூட சிலர் அதையே தொடர்ந்து செய்து வருகின்றனர்). நச்சுயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஆதாயங்கள் மட்டுமல்லாமல், தாமிர பாத்திரத்தில் இரவு முழுவதும் சேமித்து வைக்கப்பட்ருக்கின்ற நீரானது, உடலில் நோயெதிர்ப்பு திறனை வலுவாக்குவதில் உதவுகிறது என்று ஆயுர்வேதம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. சில மணி நேரங்கள் சேமித்து வைக்கப்படுகின்ற நீரில்  தாமிரம் வெளியிடும் அயனிகளே இதற்கு காரணம்.  இந்த நீரானது, ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும் செயல்படுவது அறியப்பட்டுள்ளது. உடலில் ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படும் சேதத்தை இது குறைக்கிறது. மூளையின் செயல்பாட்டை இது தூண்டுவதோடு, நீண்டகாலம் உயிர்வாழும் திறனையும் இது ஊக்குவிக்கிறது.  கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தாமிர கலப்பு உலோகம்:

கொரோனா வைரஸ்கள் என்பவை அடிப்படையில், விலங்குகள் அல்லது மனிதர்களிடம் நோயை விளைவிக்கும் நச்சுயிரிகளின் ஒரு பெரிய குடும்பமாகும். மனிதர்களிடம், சாதாரண சளி தடுமனிலிருந்து மத்தியகிழக்கு சுவாச நோய்குறி (MERS-CoV) மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி  (SARS-CoV) ஆகிய பல தீவிரமான நோய்களை கொரோனா வைரஸ்கள் விளைவிக்கின்றன.  

சௌதாம்ப்ட்டன் பல்கலைக்கழகத்தால் 2018 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி மத்தியகிழக்கு சுவாச நோய்குறி (MERS-CoV) மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி  (SARS-CoV) ஆகியவற்றோடு தொடர்புடைய, சுவாசப்பாதையை பாதிக்கின்ற நச்சுயிரிகளின் பரவலை தடுப்பதற்கு தாமிரம் திறன்மிக்கவாறு உதவமுடியும்.  விலங்குகளில் காணப்படும் கொரோனா வைரஸ்கள் SARS மற்றும் MERS போன்றவற்றை மானிடர்களுக்கு பரப்புவதால் ஏற்படும் கடுமையான தொற்றுகளினால் அதிக அளவு உயிரிழப்பை விளைவிக்கின்றன.  இவற்றோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்களிடம் காணப்படக்கூடிய கொரோனா வைரஸ் - 229E பொது மேற்பரப்புகளின் மீது தொற்று பரவக்கூடிய திறனோடு தொடர்பு இருக்கக்கூடும் என்றும், ஆனால் தாமிரத்தின் மீது அதிவேகமாக அழிந்துவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  எனினும்,  உலகெங்கிலும் தற்போது பரவிவரும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றை (SARS-CoV-2) தாமிரம் அல்லது தாமிர கலப்பு உலோகத்தில் செய்யப்பட்ட மேற்பரப்புகள் செயலற்றதாக ஆக்கிவிடுமா என்பது இன்னும் நமக்கு தெரியவரவில்லை.  

அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி இதழில், மேரிலேண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரீட்டா ஆர். கார்வெல் அவர்களால்  பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையின்படி கொரோனா வைரஸ் – ன் (புதிய கோவிட்-19 அல்ல) தாக்கத்தை பல்வேறு மேற்பரப்புகள் மீது அவர் ஆய்வு செய்திருக்கிறார்.  தாமிரத்தை தவிர, பிற உலோக அல்லது பிற பொருட்களால் செய்யப்பட்டவற்றின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்கள் உயிர் பிழைத்திருப்பதையும் மற்றும் வளர்ச்சியடைந்து பெருகுவதையும் அவர் கண்டறிந்திருக்கிறார். அவர் இது குறித்து பேசுகையில், "தாமிர உலோகப் பரப்புக்கு வெளிப்படுத்தப்படுவது வைரஸ் மரபுத் தொகுப்புகளை அழித்தது மற்றும் வைரஸின் அமைப்பியலை திரும்ப மாற்ற இயலாதவாறு பாதித்திருக்கிறது.  மேற்பரப்பில் நச்சுயிரியின் பரவலை சீர்குலைப்பதும் இதில் உள்ளடங்கும்” என்று கூறினார். 

மருத்துவமனைகளில் தாமிர கலப்பு உலோகங்களின் முக்கியத்துவம்: 

1980-களுக்கு முன்பு வரை  தாமிர, செம்பு கலப்பு உலோகங்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.  1983 ஆம் ஆண்டில் பில்லிஸ் ஜே. குன் என்பவரால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையானது, தாமிரம் மற்றும் அதன் முக்கியத்துவம் எப்படி காணாமல் போனது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது.  

அவர் நடத்திய பயிற்சி செய்முறைகள் ஒன்றில், பிட்ஸ்பர்க்-ல் உள்ள ஹமாட் மருத்துவ மையத்தின் மாணவர்கள், மருத்துவமனையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களின் மேற்பரப்புகளை ஆராய்ச்சிக்காக ஒற்றி  சேகரித்தனர்.  கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் பௌல்கள், கதவு கைப்பிடிகள் ஆகியவையும் இவற்றுள்ள உள்ளடங்கும்.  கழிப்பறைகளில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு எதுவும் கண்டறியப்படாத நிலையில் வேறுபிற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த அமைப்புகள் அழுக்காக இருந்ததோடு அவைகளில் பாக்டீரியா வளர்ந்து வருவதை அவர் கண்டறிந்தார்.  

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பளபளப்பாகவும், சுத்தமாகவும் தோற்றமளித்தாலும் கூட கதவை அழுத்தி  திறப்பதற்காக செம்பால் செய்யப்பட்ட பிளேட்டுகள் (66 சதவிகிதம் தாமிரம், 33 சதவிகிதம் துத்தநாகம் கலந்து செய்யப்பட்ட  உலோகம்) என்பவற்றிற்கு எதிராக ஸ்டீலால் செய்யப்பட்ட (88 சதவிகிதம் இரும்பு மற்றும் 12 சதவிகிதம் குரோமியம்) பிளேட்டுகளில் அதிக அளவில் பாக்டீரியா காணப்பட்டன என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

"உங்களது மருத்துவமனை புதுப்பிக்கப்படுமானால், பழைய தாமிரம் மற்றும் செம்பில் செய்யப்பட்ட பொருட்களை தக்கவைக்க முயற்சியுங்கள் அல்லது அதுபோல திரும்பவும் தயாரித்து பொருத்துங்கள்.  உங்களிடம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்ட வன்பொருட்கள் இருக்குமானால், ஒவ்வொரு நாளும் அவைகளில் தொற்று நீக்கும் பணி நடைபெறுவதை, குறிப்பாக தீவிரசிகிச்சைப் பிரிவுகளில், உறுதி செய்யுங்கள்,” என்று தனது அறிவுறுத்தலை இறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

ஏன் தாமிர அறைகலன்கள் இன்றைய காலத்தில் பிரபலமாக இருப்பதில்லை? 

வேறு எதுவும் தேவைப்படாமலேயே வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை தாமிரம் அழித்துவிடுகிறது.  யுஎஸ்–ன் பாதுகாப்பு துறை மானியத்தைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி மூன்று மருத்துவமனைகளில் தொற்று பரவல் விகிதங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். அதில் காப்பர் அலாய் அறைகலன்களை கொண்ட  மருத்துவமனைகளில் 58 சதவிகிதம் குறைவான தொற்று விகிதம் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.  

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தாமிரம் ஏன் அதன் கவர்ச்சியையும், பிரபலத்தையும் இழந்தது?  நமது இல்லங்களுக்கு மின்சக்தியை வழங்குகின்ற மின்கம்பிகளில் தாமிரம் முக்கியமாக இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மின்சாரத்தை வேகமாக கடத்தும் திறனே இதற்குக் காரணம்.   ஆனால், தாமிரம் மற்றும் அது அதன் கலப்பு உலோகங்கள் மலிவானவை அல்ல.  

இதற்கும் மேலாக, காற்றில் வெளிப்படுதலின் காரணமாக, செம்பும், தாமிரமும் கருத்துப்போகின்றன.  காலப்போக்கில் இது அழுக்காக தோற்றமளிக்கிறது மற்றும் தூய்மைப்படுத்தும் திரவங்களைக் கொண்டு தொடர்ந்து இதைப் பராமரிப்பதும் அவசியமாகிறது.  ஆனால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் இதுபோல பாதிக்கப்படுவதில்லை.  

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தொடர்பு ஏற்படக்கூடிய தொற்று வியாதிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, மருத்துவமனைகளின் காப்பர் கலந்த உலோகங்களைப் பயன்படுத்துவதற்கு ஒருமுறை செய்யும், சற்றே விலை அதிகமான முதலீடு பல உயிர்களை பாதுகாக்க உதவக்கூடும்.  மருத்துவமனைகளில் ஏற்படும் நோய் தொற்றுகளில் ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 90,000 நபர்கள் உயிரிழக்கின்றனர்.  இதைப் பார்க்கும்போது, தாமிரத்தாலும் மற்றும் அதனோடு பிற உலோகங்களைக் கலந்தும் செய்யப்படுகின்ற பயன்பாட்டு பொருட்கள், கடந்த காலத்தைப்போல மீண்டும் பிரபலமாக ஆவதற்கான அவசியம் இப்போது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 


மக்கள் கருத்து

அருண்மே 9, 2020 - 12:31:05 PM | Posted IP 157.5*****

எனக்கும் கொரோனா வந்துச்சு. 3 நாள் பாரசிடமால் போட்டேன். போயிடுச்சு.

Then tamilanApr 1, 2020 - 08:01:55 PM | Posted IP 162.1*****

Enna marupadiyum Sterlite alaiyai thirakka solluveenga bola....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory