» செய்திகள் » தமிழகம்

Share

புதிய சட்டமன்றத்தில் கருணாநிதி படம்: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!

செவ்வாய் 9, மார்ச் 2010 3:44:29 PM (IST)

புதிய சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை வைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி வருபவர் என்று அவரை வருணித்து, இவ்வாறு இந்த மாமன்றத்திற்கு சிறப்பு சேர்த்து வரும் கருணாநிதியின் உருவப்படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
 
இது சட்டமன்ற மரபுகளுக்கு முரணான செயல். மிகச் சிறந்த தேசத் தலைவர்கள் அல்லது நாடாளுமன்றவாதிகளின் சிலைகளையோ, திருவுருவப் படங்களையோ நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றால், சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களை அமைப்பதற்கென்று மக்களவை சபாநாயகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அந்தக் குழுதான் யார் யாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். இது நாடாளுமன்ற நடைமுறை.

எம்.ஜி.ஆரின் உருவப்படம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று அதிமுக மட்டுமல்லாமல், அப்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் விரும்பியது. அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், சிங்காரம் ஆகியோர் இதனை வலியுறுத்தி சட்டமன்றத்திலேயே பேசினர். எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறந்து வைக்க அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், எம்.ஜி.ஆர். உருவப்படம் இந்த மாமன்றத்திலே திறந்து வைக்கப்பட்டது.
 
ஆனால் இன்று என்ன நிலைமை? யாரும் கோரிக்கை விடாத சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலையும் பெறாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெறாமல், தோழமை கட்சிகளையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுப்பதுதான் ஜனநாயக நெறிமுறையா? இந்த முடிவு எடுக்கப்பட்ட முறையே ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறியுள்ளார்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads