» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செவ்வாய் 12, நவம்பர் 2024 5:26:12 PM (IST)

இலங்கைக் கடற்படை கைது செய்துள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று (12-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

09.11.2024 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12.11.2024 அன்று, நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM-8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory