» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி: ராஜாக்கமங்கலம் அருகே பரிதாபம்!
சனி 2, நவம்பர் 2024 5:41:30 PM (IST)
ராஜாக்கமங்கலம் அருகே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆடராவிளையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் ஸ்ரீதர் (13). ஸ்ரீதர் ஈத்தாமொழி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று மாலை ஸ்ரீதர் வீட்டு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் சாலையோரமாக லோடுடன் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரின் செருப்பு எதிர்பாராத விதமாக அந்த லாரியின் மீது விழுந்துள்ளது. உடனே ஸ்ரீதர் தனது செருப்பை எடுப்பதற்காக அந்த லாரி மீது ஏறினார். அப்போது மேலே சென்றுகொண்டிருந்த மின் கம்பியில் உரசியதில் ஸ்ரீதரை மின்சாரம் தாக்கியது.
இதில் அலறியபடி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக ஈத்தாமொழியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீதர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைகண்டு அங்கிருந்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுந்தனர். பின்னர், ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.