» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காலத்தை உருவாக்கியவன் மகாகவி: வைரமுத்து புகழஞ்சலி
புதன் 11, செப்டம்பர் 2024 11:55:09 AM (IST)
காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: கவிக்கும் மகாகவிக்கும் என்ன வேறுபாடு?. காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்திய விடுதலைக்கு ஆதரவாக ஒரு ஜனநாயகக் காலத்தை, பண்டித மொழிக்கு எதிராக பாமர மொழிக்கு ஆதரவாக ஓர் இலக்கியக் காலத்தை உருவாக்கியதில் பாரதி ஒரு மகாகவி.
எரிக்கப்படுகிற வரைக்கும் வாழ்வில் அப்படி வறுமைப்பட்டவனும் எரித்து முடித்தபிறகு வாழ்வில் அப்படிப் பெருமைப்பட்டவனும் அவனைப்போல் இன்னொருவர் இல்லை. இன்று அவன் உடல் மறைந்த நாள். அவன் நீங்கா நினைவுக்கும் தூங்காப் புகழுக்கும் தமிழ் அஞ்சலி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.