» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள் உலக சாதனை படைக்க வேண்டும்: ஆட்சியர்

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 4:52:07 PM (IST)



குமரி மாவட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உலகளவில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா கூறினார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளுக்கான துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (10.09.2024) நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்து பேசுகையில்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 2024-2025ஆம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போட்டிகள் இன்று முதல் வருகின்ற 24.09.2024 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இப்போட்டிகளின் முக்கிய நோக்கம் அனைவருடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதேயாகும்.

அந்த வகையில் நமது மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வருடம் 19,907 பள்ளி மாணவ மாணவியர்கள், 6,453 கல்லூரி மாணவர்கள், 615 மாற்றுத்திறனாளிகள், 651 அரசு அலுவலர்கள், 1743 பொதுமக்கள் என மொத்தம் 29,369 வீரர் மற்றும் வீராங்கனைகள் இணையதளத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளார்கள் என்பது பாராட்டுக்குரியது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளத்தில் பதிவு செய்த மாவட்டங்களில் நம் மாவட்டம் மாநிலத்திலேயே 12வது இடத்தைப்பெற்று, பெருமை சேர்த்துள்ளார்கள்.

இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் 52 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 12 வகையான போட்டிகளும் என மொத்தம் 64 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவில் வெற்றி பெறும் 854 நபர்களுக்கு முதலிடம் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களுடன் பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முதல்பரிசு ரூ.3000/- இரண்டாம் பரிசு ரூ.2000/- மூன்றாம் பரிசு ரூ.1000/-என பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெற இயலும். போட்டியில் திறமையானவர்கள் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

அவ்வாறு கண்டறியப்படும் திறமையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை SDAT விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணப்படி, சீருடை, தங்குமிட வசதி. உணவு ஆகியன தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்படும். 

மாநில அளவில் குழுப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் கோப்பையும் வழங்கப்படும். எனவே மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் அனைத்து தரப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு, பரிசு பெறுவதோடு, வெற்றி பெற்றவர்கள் மாநில, தேசிய மற்றும் உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்கள்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டலத்தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர் கலா ராணி, மகளிர் விளையாட்டு விடுதி மேலாளர் வினு, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory