» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:19:50 AM (IST)இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக அரசு சார்பில், "ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்" சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகளான, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம் - திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் வீ.நாராயணன், 

ஸ்ரீஹரிகோட்டா - சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன், பெங்களூரு - யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி - உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ .ஆசீர் பாக்கியராஜ், சந்திரயான் - 2 திட்ட இயக்குநர் மு.வனிதா, ஆதித்யா l1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேல் ஆகியோரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவத்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "ஆகஸ்ட் 23-ம் நாள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை, உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள். 1959-ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964-ம் ஆண்டு அமெரிக்காவும், 2013-ம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023-ம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. 

அதாவது நிலவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த, அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை.

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது. இப்படிப்பட்ட பெருமையை தமிழகத்துக்குத் தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் எல்லோரையும் தமிழக முதல்வராக கோடிக்கணக்கான தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன். உங்கள் எல்லோரையும் வணங்குகிறேன்.

நம்ம தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவுதான். எதையும் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவுதான் தமிழறிவு. விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழகத்தின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகளை உருவாக்கி இருக்கிறது. இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ரெண்டு பேர் பெண்கள்.

என்னைப் பொறுத்தவரை தமிழக இளைய சமுதாயத்தினர் இவர்களைத்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் தமிழ் இனத்துக்கும் தமிழகத்துக்கும் என்ன பெருமை என்றால் சந்திரயான் – 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. 2008 அக்டோபர் 28-ம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்- 2, 2019 ஜூலை 15-ம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் இருந்தார். இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

இந்த பெருமையை தமிழக அரசு போற்றும் விதமாக, இரண்டு அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழக அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகதான் தமிழக அரசு இந்தத் தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு, மேலும், மேலும் இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இரண்டாவது அறிவிப்பு என்னோட கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழக மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கின்ற திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக அப்படி உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம். சென்ற ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறோம். 

10 லட்சம் என்று இலக்கு வைத்திருந்தோம். ஆனால் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறோம். நம்முடைய மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்துக்கு தொழில் தொடங்க வருகிறார்கள். அதற்குத் தகுதியானவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை 58 லட்சம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்திருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மாணவ கண்மணிகளே, உங்களை நான் கேட்டு கொள்வது, அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமைத் திறனையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். இன்றைய மாணவர் சமுதாயத்திலிருந்து, இந்த மேடையில் இருக்கின்ற ஆளுமைகளைப் போன்ற அறிவியல் மேதைகள் உருவாகவேண்டும். அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் இலக்கு. 

அந்த வகையில், இங்கே அமர்ந்திருப்பவர்கள் அறிவியலாளர்களாக மட்டும் இல்லை, அறிவியல் வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து, பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அறிவியல் ஆளுமைகள், திறமைசாலிகளின் கூட்டு முயற்சியால் தான் இவை அனைத்தும் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் அறிவியல் துறையில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. நம்மை விட அதிகமான தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், அதிகமான தொழில்நுட்ப அறிவுக் கூர்மை கொண்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றித் தொடரட்டும். சூரியன் பற்றியும், நிலாவை பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். மனிதரை விண்வெளிக்கு அனுப்புகின்ற வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டைக் காப்போம். நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம்" என்று முதல்வர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory