» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குட்கா, பான்மசாலா மீதான தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!

சனி 28, ஜனவரி 2023 10:05:43 AM (IST)

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது: உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டவிரோத குட்கா, பான்மசாலா விற்பனையாளா்கள், மொத்த வியாபாரிகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் இது தொடா்பாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு, தடை உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த சட்ட நடவடிக்கையை எதிா்த்து பல நிறுவனங்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தன. தற்போது, இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு, அதன் தீா்ப்பில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், குட்கா, பான் மசாலாவுக்கு உணவு பாதுகாப்பு ஆணையா் விதித்த தடையை ரத்து செய்துள்ளது.

நாடுமுழுவதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையா்கள் உரிய விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனா். இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும், தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மையான காரணமாக உள்ளன.

எனவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தடையை நீட்டிப்பதை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம், விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநா்களுடன் ஆய்வு செய்து வருகிறது என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory