» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 28ல் தொடக்கம் - பிப்.5ல் தேரோட்டம்!

செவ்வாய் 24, ஜனவரி 2023 4:37:41 PM (IST)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாகம், தைப்பூச தேரோட்டம் முக்கிய விழாக்களாகும்.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 28-ம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார்கள்.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிபட்ட ஊர்வலம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் விநாயகர் வீதி உலா, உச்சிகால பூஜை, அன்னதானம், மாலையில் சாயரட்சை சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமான வாகனத்தில் வீதி உலா வருதல் மற்றும் பரதநாட்டியம், சமய சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி காலை விநாயகர் வீதி உலா, இரவு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா, சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான வருகிற 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 6-ம் தேதி காலையில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், நெல்லை, திசையன்விளையில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory