» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேனா சிலை அமைக்க அனுமதி பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியா? சீமான் கேள்வி

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 11:07:25 AM (IST)பேனா சிலை அமைக்க அனுமதி பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த திமுக அனுமதிக்கிறதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஈகைப் பேரொளி திலீபன் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் திலீபன் திருவுருவப்படத்திற்கு முன்பு ஈகைச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது, "தமிழீழத் தாயக விடுதலைப் போராட்டத்தில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய எங்களின் ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களுடைய நினைவு நாள் இன்று. எந்த ஆயுதத்தைக் கொண்டு நம்மை அழித்து ஒழிக்கத் துடிக்கிறதோ சிங்கள இனவெறி ஆதிக்கம், அதே ஆயுதத்தைக் கொண்டு தான், தன் இன மக்களைப் பாதுகாக்க முடியும் என்கிற சூழலுக்கு எங்களின் தலைவர் தள்ளப்பட்ட பிறகு, ஆயுதமற்ற சூழலில் தன் உயிரையே ஆயுதமாக ஏந்துவது என்று முடிவெடுத்தார். 

அவருடைய முடிவின் படி தன்னுடைய இன்னுயிரையே ஆயுதமாக ஏந்தி ஈகம் செய்து, ஈகைப் பேரொளியாக விளங்குகிறார் எங்களுடைய அண்ணன் திலீபன் அவர்கள். பனிரெண்டு நாட்கள் ஒரு சொட்டு நீரும் அருந்தாது, பசியையே பெரும் கருவியாக மாற்றி உலக மானுட சமூகத்தின் மனச்சான்றை உலுக்கினார். அவர் எந்த நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரை ஈந்தாரோ, அந்த நோக்கம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. 

அந்த மகத்தான மாவீரனுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிற இந்நாளில் உலகெங்கும் பரவி வாழுகிற தமிழ்ப் பெருங்குடியின் மக்கள், நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வரை, அவர் எந்த இலட்சிய உறுதியோடு, உயிரே போனாலும் சரி இந்தப் போராட்ட வடிவத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்ற உறுதியோடு நின்றாரோ, அதே உறுதியோடு நின்று, வென்று முடிப்போம் என்கிற உறுதியை ஏற்பது தான் நாங்கள் எங்களுடைய அண்ணன் திலீபன் அவர்களுக்குச் செலுத்துகிற உண்மையான வீர வணக்கமாக இருக்க முடியும். அந்த உறுதியை ஏற்று எங்களின் அண்ணன் ஈகைப் பேரொளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கத்தை நாம் தமிழர் கட்சி செலுத்துகிறது” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், "ஒரு பக்கம், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களையும், ‘எஸ்டிபிஐ’ என்கிற கட்சியைச் சேர்ந்த இந்தியா முழுமைக்கும் இருக்கிற முதன்மைப் பொறுப்பாளர்களையும் ‘என்ஐஏ’ என்கிற அமைப்பின் மூலமாக கைது செய்கிறது. மறுபக்கம், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளது. குறிப்பாக காந்தி பிறந்தநாளான அக்டோபர் 02ஆம் தேதியன்று. எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே காந்தியைக் கொன்றாரோ, அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காந்தியின் பிறந்தநாளன்று பேரணி நடத்துகிறது.

நாங்கள் நாம் தமிழர் கட்சியோ அல்லது மற்ற அரசியல் இயக்கங்களோ ஒரு கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்த அனுமதி கோரினால், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதென்று பலமுறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி எந்த நோக்கத்தையும், மக்கள் பிரச்சனையையும் முன்வைக்காமல் மாநிலமெங்கும் ஐம்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துகிறது என்றால், அந்தப் பேரணியின் இறுதியில் மதக் கலவரங்களை, வன்முறையைத் தூண்டுவது போலப் பேசுவது தான் அதன் நோக்கமாக இருக்கும். 

பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களே தனது வாகனங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொள்வது, தனது இல்லங்களில் குண்டு வீசி வெடிக்கச் செய்வது போன்ற நிகழ்வுகள் கடந்தக்காலங்களில் நடந்துள்ளது. அவை கண்காணிப்பு கருவியின் மூலமாக வெளியே தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜக உறுப்பினர்கள் வீடுகளில் ஏற்படும் குண்டு வீச்சு நிகழ்வுகள், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக ‘எஸ்டிபிஐ’ அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பது போலக் காட்ட முயற்சிக்கிறார்கள். 

இதைப் பார்க்கும்போது அவர்களின் கடந்தகால நிகழ்வுகளைப் போல அவர்களே குண்டு வீசிக்கொண்டு பழியை இசுலாமியர்கள் மீது சுமத்த முற்படுகிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. யார் செய்தார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதை விசாரிக்கத்தான் காவல்துறை, உளவுத்துறை என்று அமைப்புகள் இருக்கிறது. ஒருவேளை விசாரணை நடத்தி உண்மையிலேயே இசுலாமிய மக்கள் தான் குண்டு வீசியிருந்தார்கள் என்றால் நடவடிக்கை எடுக்கட்டும். 

காவல்துறை டிஜி‌பி அவர்கள் கூறியது போலத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கூடக் கைது செய்யட்டும். நான் அறிந்தவரை இசுலாமிய மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். இது போன்ற மனநிலைக்கே அவர்கள் செல்ல மாட்டார்கள். ஆனால் மக்கள் உளவியலாக இசுலாமியர்கள் தான் குண்டு வீச்சு போன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற உளவியல் மனநிலைக்குச் சென்றுவிடக் கூடாது. மக்கள் மத்தியில் ஒரு மத வெறுப்பு சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது” என்று கூறினார்.

"நாங்கள் பேரணி நடத்தக் கோரி நீதிமன்றத்திலேயே அனுமதி கேட்டால், அதை மறுக்கக் கோரி கடுமையான வாதங்களை அரசு தரப்பில் முன்வைப்பார்கள். ஆனால், இந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர் பெரிதாக வாதிடவே இல்லை. அக்டோபர் 02ஆம் தேதியன்று ‘கிராம சபை’ கூட்டம் நடைபெறும் காரணத்தினால், காவலர்கள் அங்குப் பாதுகாப்பு பணிக்குச் சென்றுவிடுவார்கள் அன்பதால் பேரணி நடத்த அனுமதி மறுக்குமாறு வாதிட்டுள்ளார். நீதிபதி அதை ஒரு பெரிய தர்க்கமாகக் கருதாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிவிட்டார். 

ஐயா கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா காலத்தில் கூட ஆர்.எஸ்.எஸ் பேரணிகள் மறுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கூட இது போன்ற பேரணிகள் நடக்கவில்லை. ஆனால், இந்த திமுக அரசிற்கு ‘பேனா’ நினைவு சின்னம் அமைக்க பாஜக அனுமதி கொடுக்கிறார்கள், அதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

sooriya அவர்களுக்குSep 28, 2022 - 05:10:21 AM | Posted IP 162.1*****

ஆமா நல்லா காமெடி பண்ணுவாங்க , கதறல் இன்னும் பத்தல..

SOORIASep 27, 2022 - 03:29:32 PM | Posted IP 162.1*****

சூப்பர் காமெடியன். சர்க்கஸ் கோமாளி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory