» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது : பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:36:44 AM (IST)

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த மாதம் 31-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ''ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்'' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த நிலையில், கனல் கண்ணனின் இந்த சர்சைக்குரிய கருத்தை அடிப்படையாக வைத்து, அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் கடந்த 4-ந்தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையறித்து, கனல் கண்ணன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை நேற்று சென்னை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

கனல் கண்ணன் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக "உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது இந்த திமுக அரசு.

மறுபுறம், கனல் கண்ணன் அவர்கள் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள இந்த திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாகக் கருத்துச் சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டார்கள். சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் இந்த திமுக அரசு, கனல் கண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை" என்று கூறி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory