» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொதுக் குழு வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரிய மனு: மன்னிப்பு கோரியது ஓபிஎஸ் தரப்பு!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 4:34:34 PM (IST)

அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பாக நீதிபதி கண்டனம் தெரிவித்தததைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா் செல்வம், அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை (ஆக.4) விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று வியாழக்கிழமை (ஆக.4) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஆக.5) தள்ளி வைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தாா். அதே நேரம் வழக்கை ஆக.8 திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அதில், ‘இந்த வழக்கின் நீதிபதியை மாற்றுவது குறித்து தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுதொடா்பாக இன்னும் முடிவெடுக்காத நிலையில்  (ஆக.5) வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்க கூடாது’ என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீா் செல்வத்தின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், களங்கப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தீா்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் அல்லது திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்யலாம் என்றாா்.  இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியதுடன் வழக்கில் அவரே நீதிபதியாக நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory