» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது மவுனம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

வெள்ளி 13, மே 2022 4:56:19 PM (IST)

அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது மவுனம் காப்பது ஏன்?  என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில், இலவச தையல் பயிற்சி மையம் சேலம் 5 ரோடு மெய்யனூர் மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் எதிரில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களை பற்றியோ, மக்கள் பிரச்சினைகள் பற்றியோ கவலைப்படாத அரசு திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வருகிறார்கள்.

நிதி ஆதாரத்தை திரட்ட இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயரும், அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் நம்ப வைத்து தி.மு.க. கழுத்தை அறுத்துள்ளது. கொரோனா பரவலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில் சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய சுமை வேதனை அளிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாது.

அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டத்தை நிறைவேற்றப்பட்டது. இதனால் யார் நினைத்தாலும் அங்கு விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வர முடியாது. வீடு கட்டுபவர்கள் மிகப் பெரும் சோதனையை சந்தித்து வருகிறார்கள்.செங்கல், சிமெண்ட், கம்பி விலை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலையை தி.மு.க. அரசு கட்டுபடுத்தவில்லை. சென்னையில் மாற்று இடம் ஒதுக்காமல் குடியிருப்புகளை அகற்றுவது வேதனை அளிக்கிறது. சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் நிலையில் உள்ள மக்களுக்கு அரசு உதவ வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன. உள்கட்டமைப்பை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசின் 8 வழி சாலை திட்டத்தை அ.தி.மு.க அரசு ஆதரித்தது. அ.தி.மு.க. விவசாயிகளுக்கு எதிரான கட்சி அல்ல. இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் அதிக அளவில் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று கொடுத்துள்ளோம்.

அ.தி.மு.க ஆட்சியில் 14,000 பேருந்துகள் வாங்கப்பட்டது. தற்போது இந்த பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை ஓட்டுநர்களே தெரியபடுத்தி வருகிறார்கள். நெல்கொள்முதல் நிலையங்களில் லட்ச கணக்கான நெல்மூட்டைகள் நனைகிறது. ஆனால் தி.மு.க. அரசு எதை பற்றியும் கவலைபடாமல், போதிய கவனம் செலுத்தாமல் உள்ளது. அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஆமாமேமே 14, 2022 - 08:30:32 AM | Posted IP 162.1*****

திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory