» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாஞ்சா நூல் காற்றாடி விட்டால் குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை

புதன் 6, நவம்பர் 2019 5:13:20 PM (IST)

மாஞ்சா நூல் காற்றாடி விட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால்.தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி சுமித்ராவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தின் மேல் பைக்கில் செல்லும் போது காற்றில் பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் சுமித்ராவுடன் அமர்ந்து வந்த அபினேஷ் ராவ் கழுத்தில் சிக்கி அறுத்தது. அதில் குழந்தையின் கழுத்து அறுத்து ரத்தம் கொட்டி துடிக்க துடிக்க உயிரிழந்தான். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தை வண்ணாரப்பேட்டை இணை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை காவல் துறையால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் யாரேனும் விற்பனை செய்தாலும், மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்ணாடிகள், வஜ்ரம் போன்ற பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதே மாஞ்சா நூல். ஆன்லைனில் மாஞ்சா என்ற பெயரை பயன்படுத்தி நூல்கள் விற்கப்படுகிறது. ஆன்லைனில் சட்ட விரோதமாக மாஞ்சா நூல் விற்கப்படுகிறது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். சென்னை முழுவதும் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்த 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த தனிப்படைகள் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் யாரேனும் தயார் செய்கிறார்களா, விற்பனை செய்கிறார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 50 பட்டம், 5 மாஞ்சா நூல் உருண்டை பறிமுதல் சென்னையில் போலீசாரின் தடையை மீறி வண்ணாரப்பேட்டை மணிகண்டன் முதலி தெரு, தண்டையார் பேட்டை இளைய முதலி தெரு, வ.உ.சி. நகர், காசிமேடு, ராயபுரம், கொருக்குபேட்டை பாரதி நகர், திருவொற்றியூர் என வடசென்னையில் மாஞ்சா நூல் விற்பனைக்கு பெயர் பெற்ற இடம். இந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மாஞ்சா நூல் கேட்டாலும் மறைமுகமாக கிடைக்கும். போலீசார் பல வகையில் தடுத்தாலும் மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் குடிசை தொழிலாக மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, தண்டையார் பேட்டை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ராயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் கொண்ட 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் ேநற்று நடத்திய அதிரடி சோதனையில், கடைகள் மற்றும் குடிசைகளில் ரகசியமாக விற்பனை செய்த 50 பட்டம் மற்றும் 5 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி விற்பனை செய்த நபர்கள் உதவியுடன் தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

TUTYNov 7, 2019 - 01:28:11 PM | Posted IP 108.1*****

மஞ்சசா நூளில் மட்டும் இல்லை ,செலஃபீ மரணம்,லாரி டார் பாய் ,எல்லாமே கவனித்தால் நல்லது ,மக்களும் கவனித்தால் சரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory