» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறையில் வைத்து என்னை கொல்ல தமிழக அரசு சதி: நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன் பரபரப்பு புகார்

செவ்வாய் 23, ஜூலை 2019 5:49:39 PM (IST)

சிறையில் வைத்து தன்னை கொலை செய்ய அரசு சதி திட்டம் தீட்டியுள்ளதாக கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வந்த முகிலன் புகார் தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து மாயமானார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர். பின்னர் அவரை போலீசார் சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே முகிலன் மீது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (37) என்பவர் குளித்தலை போலீசில் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் கரூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் விஜய கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் 24-ம்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார், திருச்சி மத்திய சிறையில் முகிலனை அடைத்தனர். இதனிடையே ராஜேஸ்வரி அளித்த பலாத்கார புகார் தொடர்பாக முகிலனை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தொடர்பான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலன் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது, சிறையில் வைத்து போலீசார் தன்னை தாக்கியதாகவும், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறி கோ‌ஷம் எழுப்பினார். இதையடுத்து அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதி, போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளனர். நான் ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறேன். நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு சாப்பிடுங்கள் என்றார்.

ஆனால் இதனை முகிலன் ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து நீதிபதி உங்கள் புகாரை எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்றதும், முகிலன் தனது புகாரை மனுவாக எழுதி நீதிபதியிடம் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விசாரணையை இன்று 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதற்காக இன்று காலை போலீசார் முகிலனை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு வேனில் அழைத்து சென்றனர். நீதிமன்றத்திற்கு சென்றதும் வேனில் இருந்து இறங்கிய முகிலன் திடீரென தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி கோ‌ஷம் எழுப்ப தொடங்கினார். அப்போது கைது செய், கைது செய், சிறையில் தன்னை தாக்கிய சிறைக்காவலர்களை கைது செய், 13 பேரை கொலை செய்த ஐ.ஜி. சைலேந் திரகுமார் யாதவ்வை கைது செய் என்று கோ‌ஷம் எழுப்பினார். 

மேலும் சிறையில் வைத்து என்னை கொலை செய்ய அரசு சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஏற்கனவே சென்னை ரெயில் நிலையத்தில் நடந்த சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் ராம் குமாரை சிறையில் வைத்து கொலை செய்து விட்டனர். சிறையில் தடுக்கி விழுந்து இறந்தார், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். மின்சாரம் தாக்கி இறந்தார் என்று கூறுவதெல்லாம் அரசின் சதி வேலை என்று தனது புகார்களை கூறியபடி கோ‌ஷம் எழுப்பியப்படி இருந்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முகிலனை நேற்று போல் இன்றும் குண்டுகட்டாக தூக்கிச்சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரிடம் நீதிபதி விஜய கார்த்திக் விசாரணை நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory