» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை - பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 12, ஜூலை 2019 9:03:49 AM (IST)

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கோரும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக  அரசு கடந்த ஜூன் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்குகள்,  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து இரு துறைகளும்  பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ரமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: 

தமிழகம் முழுவதும் மறுசுழற்சிசெய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள், குறிப்பாக பாலிபுரோப்பிலீன் பைகள் பிளாஸ்டிக் தடவப்பட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.  இந்த உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர். தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடியவை. இந்த பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்றும், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் இந்த பிளாஸ்டிக் மூலம் அடைப்பு ஏற்படுவதில்லை. தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பிப்தற்கு முதல்நாள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்ய ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இழைக்காதவை என சிப்பெட் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு உட்பட்டே நாங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கிறோம், ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்காமல்,  மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு  தடை விதித்துள்ளது சட்டவிரோதமானது. இதில் பாரபட்சம் காட்டப்பட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  அரசு தரப்பில்  அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதிடுகையில், ‘‘தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் மனுதாரர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளுக்கான வாய்ப்பு தரவில்லை என கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார். 

இந்த உத்தரவு மூலம் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறுவதையோ ஏற்க முடியாது. அரசு திட்டங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்யும்போது நிலஉரிமையாளர்கள் தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது எனக்கூறினால் தேசத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும். பொதுமக்களின் அடிப்படை உரிமையும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியம். அவர்களின் சுகாதாரமான குடிநீர், மாசில்லாத காற்று ஆகியவை வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலன் கருதியே அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

ஆவின் பால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பிஸ்கெட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், சாக்லெட், ஷாம்பு போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மருந்து பொருட்களும் பிளாஸ்டிக் உறைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்களை பாதுகாக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு உத்தரவில் பாரபட்சம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில், பால் பொருட்கள் அத்தியாவசியமானவை. அதனடிப்படையில் தான் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம், மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் நோக்கம் நிறைவேறும். 

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை என்றால் இந்த தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாக கருதப்படும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும். அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது. விலங்கினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக  சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான் என்பதால் இதுதொடர்பாக மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory