» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் நீதிபதி கர்ணன்! மோடியை எதிர்த்துப் போட்டியிடவும் விருப்பம்

செவ்வாய் 26, மார்ச் 2019 12:13:54 PM (IST)

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், நேற்று மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். பணியிலிருந்தபோது, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதனால், அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்ற கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மீண்டும் ஆணை பிறப்பித்தார். இதனால், அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் அவர் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறைத் தண்டனைக்குப் பின்னர், டிசம்பர் மாதம் விடுதலையானார். தற்போது ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி (ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் நீதிபதி கர்ணன். தனது கட்சி சார்பில் 35 வேட்பாளர்களை நாடு முழுவதும் நிறுத்தியிருப்பதாகவும், தான் இந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் எனவும் அறிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 25) மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக, அவர் சென்னை ஷெனாய் நகர் மத்திய துணை வட்டார ஆணையர் அலுவலகம் சென்றார். அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தனது வேட்பு மனுவில், 13 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் 38.50 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் நீதிபதி கர்ணன், மத்திய மாநில அரசுகள் சரியான நிர்வாகத்தை வழங்காததால், தான் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். தங்களது கட்சிக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடவிருப்பதாகவும் கூறினார்.


மக்கள் கருத்து

RubanMar 27, 2019 - 11:54:25 AM | Posted IP 172.6*****

He is a corrupt and unstable person. How can he lead us

சாமிMar 26, 2019 - 06:47:35 PM | Posted IP 108.1*****

நிக்கட்டும் - அரசுக்கு டெபாசிட் பணம் வருமானமாகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


CSC Computer EducationNalam PasumaiyagamThoothukudi Business Directory