» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவாஜியின் வரலாறு தெரியாமல் உளற வேண்டாம்: ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

திங்கள் 12, நவம்பர் 2018 5:16:07 PM (IST)

சிவாஜி கணேசனின் அரசியல் குறித்து உண்மை தெரியாமல் உளற வேண்டாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கலைப்பிரிவு கணடனம் தெரிவித்துள்ளது. 

1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற தனிக்கட்சித்தொடங்கி ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.நேற்று முன்தினம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினி, கமல் அரசியல் குறித்து விமர்சிக்கும்போது சிவாஜி கணேசனே தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கலைப்பிரிவுத் தலைவர் சந்திரசேகரன் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: "காழ்ப்புணர்ச்சியால், அரசியல் அரிச்சுவடி அறியாத பலரும் அரசியலில் சிவாஜி ஜொலிக்கவில்லை என்று சாதாரணமாக, போகிற போக்கில் கூறுகிறார்கள். அந்த வரிசையில், நேற்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்பவர், சிவாஜி கணேசன் கூட தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை என்று உளறுகிறார்.

ஆம், இவரைப்போல யார் காலில் விழுந்தேனும் பதவியைப் பெறவேண்டும் என்ற பதவி வெறி அவருக்கு இல்லாததுதான் காரணம். அரசியலில் ஜொலிப்பது என்றால், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி. பதவியைப் பெறுவதா? அல்லது, பதவியை, அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்ளையடித்து சொத்துக்களை சேர்ப்பதா? டெல்லி மாநிலங்களவை உறுப்பினராக இரண்டரை ஆண்டுகாலம் பதவி வகித்தபோது, தனது எம்.பி. பதவிக்கான விமான டிக்கெட், இலவச ரயில் டிக்கெட் போன்றவற்றைக் கூட உபயோகப்படுத்தாமல், தனது சொந்த செலவிலேயே பயணங்களை மேற்கொண்டவர் சிவாஜி கணேசன்.

காங்கிரசில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரங்களை தனது சொந்த செலவில் மேற்கொண்டவர். பெரியார், காமராஜர் முதல் கருணாநிதி,  எம்.ஜி.ஆர் வரை எல்லோராலும் மதிக்கத்தக்க ஒரு அரசியல்வாதியாக வாழ்ந்ததே போதும். அரசியல் நாகரிகம், சுயமரியாதை ஆகியவற்றோடு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், காமராஜரின் அடிச்சுவட்டை இறுதிவரை பின்பற்றி, யாராலும் குற்றம் சொல்ல முடியாமல் நடந்ததே அவருடைய அரசியல் வெற்றி.

அரசியல் என்றால் சம்பாதிக்கும் ஒரு தளம், பதவியை அனுபவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இடம் என்று நினைக்கும், இப்போதைய ராஜேந்திர பாலாஜி போன்ற அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால், நடிகர் திலகத்தின் நேர்மை அரசியல் கேலி செய்யக்கூடியதாக இருக்கலாம்.

சொத்துக் குவிப்பு, லஞ்ச ஊழல் வழக்கு, சிறை என்று குடும்பத்துடன் அலையும் இவர்களைவிட நடிகர் திலகத்தின் பாதையே எங்களுக்கு வெற்றிப் பாதை. அரசியலில், தேர்தல் வெற்றி என்பது மட்டுமே வெற்றி அல்ல. அப்படிப் பார்த்தால், இந்திய அரசியல் சாசன சிற்பியாகப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கார் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

ஏன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தாலும் இன்று அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படும் நல்லக்கண்ணு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. இதுபோல பல உதாரணங்களைக் கூறமுடியும். கேமரா முன்பு மட்டுமே நடித்து, மக்கள் மன்றத்தில் நடிக்கத் தெரியாத சிவாஜி கணேசன், போட்டியிட்டு வெற்றி பெறவில்லையே (அதுவும் ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார்) தவிர அவரால் உருவாக்கப்பட்ட, அவரால் வெற்றிபெற்றவர்கள் பலர்.

தான் செய்த நற்பணிகளை, பலரை வளர்த்துவிட்டதை, உருவாக்கியதை நடிகர் திலகம் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், துரதிஷ்டம், அவரால் வெற்றி பெற்றவர்கள், பலன் பெற்றவர்கள்கூட அதனை வெளியில் சொல்லாமல் விட்டதுதான். "உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் - வேறொன்றும் தெரியாது" என்று திரையில் மட்டுமல்ல, தன் பொது வாழ்விலும் மனசாட்சிப்படி நேர்மையாக நடந்துகொண்டவர் சிவாஜி கணேசன். எனவே, இனியாகிலும், நடிகர்கள் அரசியல் என்று வரும்போது அரைவேக்காட்டுத் தனமாக சிவாஜியே அரசியலில் வெற்றி பெறமுடியவில்லை என்று உளறுவதைத் தவிர்த்தால் நல்லது.” இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications

Joseph Marketing


Black Forest Cakes

New Shape Tailors


CSC Computer EducationThoothukudi Business Directory