» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாமல்லபுரத்தில் பலமுனைக் கட்டண வசூல் கொள்ளையை நிறுத்துக: வைகோ வலியுறுத்தல்

செவ்வாய் 13, மார்ச் 2018 4:23:39 PM (IST)

மகிழ்ச்சியோடு மாமல்லபுரத்தைப் பார்க்க வருகின்றவர்கள், பலமுனைக் கட்டண வசூல் கொள்ளைகளால் நரக வேதனை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மத்திய, மாநில அரசுகள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தின் பழமையான பல்லவப் பேரரசின் துறைமுகப்பட்டினமான மாமல்லபுரத்தில், மகேந்திரவர்ம பல்லவர், மாமல்லர் நரசிம்ம வர்மன், ராஜசிம்மன் ஆகியோர் காலத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்களைக் கண்டு மகிழ்வதற்காக வெளிநாடு மற்றும் உள் நாட்டில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

மூதாதையர்கள் விட்டுச் சென்ற இந்தக் கலைப்படைப்பை, உள்ளூர் மக்களிடமிருந்து பறித்துக்கொண்டு, சுற்றுச்சுவர் எழுப்பி இரும்புக் கம்பிகளால் வேலி அமைத்துக் கையகப்படுத்திக் கொண்டது தொல்லியல் துறை. 1996 ஆம் ஆண்டு ஒருவருக்கு ஐந்து ரூபாய் என கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர்.  28.12.2000 ஆம் ஆண்டு நுழைவு வாயில் ஒன்றுக்கு வெளிநாட்டு பயணிக்கு 10 அமெரிக்க டாலர், இந்தியப் பயணிகளுக்கு 10  ரூபாய் என உயர்த்தினர். மாமல்லபுரத்தில் கடற்கரை அலை வாயில் கோயில், ஐந்துரதம், அர்சுனன் தவக்கோலம், புலிக்குகை என நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. அப்படியானால் வெளி நாட்டவர் ஒருவருக்கு 40 அமெரிக்க டாலராகவும், இந்தியர்களுக்கு 40 ரூபாயும் ஆகும்.

இது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அப்போது மாமல்லபுரம் பேரூராட்சிமன்றத் தலைவராக இருந்த மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என்னிடம் முறையிட, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் நான் முறையிட்டேன். அவர்  சுற்றுலா அமைச்சர் அனந்தகுமாரிடம் கூறி,  நான்கு நுழைவு வாயிலுக்கும் சேர்த்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு 5 அமெரிக்க டாலராகவும், இந்தியப் பயணிகளுக்கு 10 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்து, மாமல்லபுரத்தில் இனி புதிய வீடு கட்டக் கூடாது; பழைய வீட்டை விரிவாக்கம் செய்து புதுப்பிக்கக் கூடாது; புதிய மின் இணைப்புகள் வழங்கக் கூடாது என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறைத் தண்டனை என்றும் அறிவித்தனர். 2012 ஆம் ஆண்டு, 108  வைணவத் திருத்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயிலைக் கையகப்படுத்திக் கொண்டனர்.

இனி பொறுப்பதற்கு இல்லை என்று கிளர்ந்து எழுந்து மாமல்லபுரம் மக்கள், வீரியம் நிறைந்த பல போராட்டங்களை நடத்தினர். அவர்களுக்கு முழுமையாகத் துணை நின்றதோடு அல்லாமல் எனது தலைமையில் 21.11.2012 அன்று மாமல்லபுரத்தில் கண்டனப் போராட்டம் நடத்தியதற்குப் பின் மத்திய தொல்லியல்துறை எடுத்த  முடிவுகளைக் கைவிட்டது.

01.04.2016 முதல் வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய், இந்தியர்களுக்கு 30 ரூபாய் என உயர்த்தினர். கடந்த 22.12.2017 அன்று மத்திய அரசிதழில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 10 ரூபாய் கூடுதலாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 100 ரூபாய் கூடுதலாகவும் உயர்த்துவதாக அறிவித்து மக்கள் கருத்தைக் கேட்டுள்ளனர். அந்த அறிவிப்பைத் தமிழில் வெளியிடவில்லை. இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே  வெளியிட்டு இருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், மாமல்லபுரத்தின் மூன்று கி.மீ சுற்றளவில் நான்கு இடங்களில் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை ஆகும். மத்திய தொல்லியல் துறை நுழைவு கட்டணம், மாநில அரசின் சாலை போக்குவரத்து வாகன நுழைவுக் கட்டணம், பேரூராட்சி வாகன நுழைவுக் கட்டணம், புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வாகன நிறுத்தக் கட்டணம் என்று பல முனைகளில் சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் கட்டண முறையை உடனடியாக ஒழுங்குபடுத்திட வேண்டும்.

குறிப்பாக கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தாமலேயே மாமல்லபுரத்தில் இரண்டு, கோவளத்தில் ஒன்று, வெங்கப்பாக்கத்தில் ஒன்று என அடாவடி வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மேலும் மாமல்லபுரத்திற்க உள்ளே செல்ல மட்டுமே நுழைவுக் கட்டணம், ஆனால் இரவு தங்கி காலையில் வெளியே செல்கின்ற  சுற்றுலா வாகனங்களையும் மடக்கி  வசூல் செய்கின்றார்கள்.

மகிழ்ச்சியோடு மாமல்லபுரத்தைப் பார்க்க வருகின்றவர்கள், பலமுனைக் கட்டண வசூல் கொள்ளைகளால் நரக வேதனை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மத்திய, மாநில அரசுகள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், நான்கு சுங்கச்சாவடிகளையும் அகற்றிட வேண்டும்' என்று வைகோ தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education


Black Forest CakesNalam Pasumaiyagam

Joseph Marketing

New Shape Tailors
Thoothukudi Business Directory