» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதரவு எம்எல்ஏக்கள்21பேரும் ராஜினாமா செய்ய முடிவு? டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:03:35 AM (IST)

ரூ.20 கோடி வரை தருகிறோம்’ என்றும், ‘ஒத்துப்போகவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு, தமிழக போலீசார் மிரட்டல் விடுத்திருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களை தமிழக போலீசார் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கவேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.20 கோடி வரை தருகிறோம் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர். 

இதற்கு ஒத்துப்போகாத எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியும் உள்ளனர். தமிழகத்தில் நடந்து வரும் துரோக ஆட்சி, கர்நாடகத்தில் உள்ள எங்களது எம்.எல். ஏ.க்களை போலீசார் மூலம் மிரட்டி பார்த்துள்ளனர். இதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக போலீசில் புகார் அளிக்க உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை மிரட்டிய போலீசார் மீதும், அத்துறை தலைவராக இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

என் மீதும், நடிகர் செந்தில் மீதும் எம்.பி. குமார் குறித்து பேசியதற்காக திருச்சி சி.பி.சி.ஐ.டி. சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் செந்தில் என்ன பேட்டி கொடுத்தார்? என்று கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனது தூண்டுதலின் பேரில் அவர் ஏதோ பேசியதாக வழக்கு போடப்பட்டு இருக்கிறது. நான் பயந்து இதனை சொல்லவில்லை. எந்த அளவுக்கு அவர்கள் தரம் தாழ்ந்து, எப்படியாவது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே கூறுகிறேன்.

யாரோ கொடுத்த புகாரின் பேரில் பழனியப்பன் எம்.எல்.ஏ.வை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாமக்கல்லில் வைத்து விசாரித்தனர். இந்த நிலையில் சம்மனுக்கு வரவில்லை என்று கூறி அவரை கைது செய்ய போலீசார் அலைந்துகொண்டு இருக்கின்றனர். பழனியப்பன் எம்.எல்.ஏ. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியிருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. சட்டப்படி அவர் எதையும் சந்திப்பார்.

கவர்னர் மீது நம்பிக்கை இருப்பதால் தான் நாங்கள் சொகுசு விடுதியில் தங்கியிருக்கிறோம். யாருடைய தூண்டுதல் இல்லாமல் நாங்களே தான் விடுதியில் ஒன்றாக தங்கியிருக்கிறோம் என்று எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் தெளிவாகவே கூறியிருக்கிறார்கள். எங்களிடம் இருந்து விலகிச்சென்ற கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் கூட, ‘நானாகத்தான் விடுதியில் தங்கியிருந்தேன். யாரும் என்னை மிரட்டவில்லை’ என்று கூறியிருக்கிறார். இதுதான் உண்மை.

இந்த அரசாங்கத்தின் இதுபோன்ற அத்துமீறல்களை 30 வருடங்களாக பார்த்து வருகிறேன். அதிகார திமிரில் மிரட்டியவர்கள் எல்லாம், இன்றைக்கு எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் போயிருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமி, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கெஞ்சி கூத்தாடி வருகிறார். எம்.எல்.ஏ.க்களை, போலீசார் மூலம் மிரட்டி பார்க்கிறார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க, எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்தகட்ட நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தற்போது எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?

பதில்:- 21 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

கேள்வி:- கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உங்களது அடுத்த திட்டம் என்ன?

பதில்:- கவர்னரை கடந்த 7-ந் தேதி சந்தித்து முறையிட்டு இருக்கிறேன். வருகிற 14-ந் தேதி (அதாவது இன்று) வரை உங்கள் பதிலுக்காக காத்திருப்போம் என்று கூறியிருக்கிறேன். நாளை (இன்று) வரை பார்ப்போம். உரிய பதில் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உங்களிடம் தெரிவிக்கிறேன்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 96 சதவீத நிர்வாகிகள் வந்திருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- அவர்கள் நடத்திய பொதுக்குழு செல்லுமா? என்பதே ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே தெரியும். கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கு தான் பொதுக்குழு கூட்டம் நடத்த அதிகாரம் உண்டு. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எப்படி பொதுக் குழுவை கூட்டமுடியும்?

கேள்வி:- உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கு வாய்ப்பு உண்டா?

பதில்:- அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

கேள்வி:- தி.மு.க.வுடன், நீங்கள் இணக்கமாக செல்வதாக கூறப்படுகிறதே?

பதில்:- இது தவறு. தி.மு.க. எங்களின் பிரதான அரசியல் எதிரி. நாங்கள் எதற்காக அவர்களுடன் கைகோர்க்க வேண்டும்? இப்போது மட்டும் அல்ல, எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. வுடன் நாங்கள் சேரப்போவது கிடையாது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors

CSC Computer Education

Pop Up Here

Black Forest Cakes

Universal Tiles BazarNalam Pasumaiyagam

selvam aqua

Johnson's EngineersThoothukudi Business Directory