» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

புதன் 13, செப்டம்பர் 2017 3:36:20 PM (IST)

தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று உயர்நீதிமன்றம்  கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ ஜியோ) செப்.7 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.சேகரன் மற்றொரு மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளை மீறும் வகையில் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் உள்ளிட்டோர் செப்டம்பர் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் சூரிய பிரகாசம் நீட்தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களின் போராட்டமும் தொடர்கிறது என்று குறிப்பிட்டார். 

இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா?, போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், அரசியல் ஆதாயத்திற்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்பட்டு வருகின்றன. கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. கல்வி முறையை முன்னேற்றுவதில் உயர்நீதிமன்றம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது. எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியவர்கள் அதனை புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? 

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிக்கொண்டு  ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மருத்துவம் படிப்பதற்கு 5 மாணவருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்” என்று கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டம் நடத்தும் இவர்கள் எதிர்காலத்தில் ஏதாவது நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஆசிரியர் சங்கங்கள்தான் போராட்டத்தை தூண்டுகின்றன. இந்த போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்தே பிடித்தம் செய்து இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும்.

தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? அது போல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு ஆசிரியர்கள் கூட சங்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் நல்ல அதிகாரிகள் பலர் வேலை செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள். இதுபோன்று முட்டுக்கட்டை போடு வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றவர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 18-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமை (செப்.18) தேதிக்கு ஒத்துவைத்தார். 


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 04:24:24 PM | Posted IP 122.1*****

மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் இவர்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம்? அரசு பள்ளியில் பயிலும் சொற்ப மாணவர்களும் முழுமையான கல்வித்திறன் அடைவதில்லை! காரணம் கல்வித்திட்டம் பின்னர் ஆசிரியர்கள்!

மக்கள்Sep 13, 2017 - 07:21:50 PM | Posted IP 110.2*****

மக்கள் வரி பணத்தில் கொழுத்தசம்பளம் வாங்கிக்கொண்டு தன் கடமையில் இருந்து தவறிய ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களை உடனே டிஸ்மிஸ் செய்துவிட்டு அந்த பணிக்கு படித்து வேலை இல்லாத பட்டதாரிகளை வேலையில் சேர்க்கவேண்டும் {இவனுகள்எல்லாம் கொத்தவேலைக்கும்,உப்பளத்துவேலைக்கும் போனால்தான் திருந்துவாங்க }

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD
crescentopticalsThoothukudi Business Directory