» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

நெல்லை தொழில்நுட்ப பூங்கா நவம்பரில் செயல்படும்: அமைச்சர் பூங்கோதை

எம்.செல்வா | வியாழன் 29, ஜூலை 2010 5:50:56 PM (IST)



நெல்லை அருகே கங்கைகொண்டானில் 500 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக நெல்லைவந்த முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து கங்கைகொண்டானில் அதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ரூ.14 கோடியில் 50 ஆயிரம் சதுர அடியில் எல்காட் அலுவலகமும் ரூ.10 கோடியில் சாலை வடிகால் உள்ளிட்ட உள்கட்ட அமைப்புபணிகளும் நடந்து வருகிறது.

இந்த பணிகளை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை, செயலாளர் தேவிதார் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். அதன்பிறகு அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்பேரில் நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அக்டோபர் 31க்குள் கட்டுமானபணி அனைத்தும் முடிந்துவிடும். நவம்பர் முதல்வாரத்தில் தொழில்நுட்ப பூங்கா செயல்பட தொடங்கும்.

இதன்மூலம் நேரடியாக 1500 பேருக்கும், மறைமுகமாக 4500 பேருக் கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். முதற்கட்டமாக இன்று 3 நிறுவனங்கள் தொழில் தொடங்க இடம் வாங்கியுள்ளனர். மேலும் 50 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுவரும் அலுவலக பணிகள் உள்ளூர் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க வாடகைக்கு விடப்படும். இதற்காக ஒரு சதுர அடிக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கு சூரிய ஒளியை பயன்படுத்தி 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்காக 25 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை தொழில்நுட்ப பூங்கா பணிகள் 8 வாரங்களில் முடியும். திருச்சி, நெல்லை பணிகள் ஒரே நேரத்தில் முடியும். ஓசூரில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அவருடன் ஐடி பார்க் வர்த்தக வளர்ச்சி மேலாளர் ஜெயக்குமார், எல்காட் கிளை மேலாளர் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர். 


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads