» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையப் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்!
சனி 14, மார்ச் 2026 9:07:47 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 'Thoothukudi' என ஒரே மாதிரியான தமிழ் உச்சரிப்புடன் மாற்றம் செய்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சூட்டப்பட்ட 'Tuticorin' (டூட்டிகொரின்) என்ற பெயரினை மாற்றி, நகரின் அசல் தமிழ்ப் பெயரான 'Thoothukudi' (தூத்துக்குடி) என்பதையே எல்லா மொழிகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், வாகைகுளம் விமான நிலைய வளாகத்தில் பெயர் மாற்ற விழா நடைபெற்றது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் விபின்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலர் ரூபினா அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசியதாவது: "இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். தூத்துக்குடி மாநகரின் செழுமையான கலாசார மரபையும், அதன் தமிழ் அடையாளத்தையும் கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் 'தூத்துக்குடி' என்றே அழைக்கப்படும்.
சுமார் ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் 17,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன முனையக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக 1,350 மீட்டராக இருந்த ஓடுதளம் (Runway), தற்போது 3 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏர்பஸ் ஏ-320 மற்றும் போயிங் போன்ற பெரிய ரக விமானங்கள் இனி தூத்துக்குடியில் தடையின்றித் தரையிறங்கும்.
இந்தியா மற்றும் தமிழகத்தின் விமானத் துறை வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-இல் 74-ஆக இருந்த நிலையில், தற்போது 166-ஆக உயர்ந்துள்ளது. விரைவில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏர்பஸ் விமான சேவைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை மற்றும் சேலம் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசுகையில், "பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தின் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்குச் சுமார் ரூ. 13 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றம் நமது கலாசாரத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு நடவடிக்கை" என்றார். இந்நிகழ்ச்சியில் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் விபின்குமார், விமானப் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலர் ரூபினா அலி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:20:04 PM (IST)

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:37:20 PM (IST)









