» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எப்போது நிறைவேறும் புதுக்கோட்டை வட்டார 60 கிராம மக்களின் புதிய பாலம் கோரிக்கை?
வியாழன் 30, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை புதுக்கோட்டையில் பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் கட்டியும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தை நீட்டிப்பு செய்தும், சுமார் 60 கிராம மக்களின் முடங்கியுள்ள போக்குவரத்தை, ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டையை மையமாகக் கொண்டு வாகைகுளம், முடிவைதானேந்தல், கூட்டாம்புளி, குலையன்கரிசல், ராமச்சந்திராபுரம்,மேலகூட்டுடன்காடு, நடுக்கூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, சிறுப்பாடு, திருமலையாபுரம், சூசைபாண்டியாபுரம் உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி-திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர், மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் புதுக்கோட்டை வந்து செல்கின்றனர்.
கடந்த காலங்களில் தூத்துக்குடி-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும், புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. அப்போது இரவு நேரங்கள் உள்பட எந்த நேரமானாலும் பொதுமக்களுக்கு பயணம் மேற்கொள்ள மிக எளிதாக இருந்தது. இதற்கிடையே ஊருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அப்போதும் பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. அப்போதும் கூட பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி, பயன்பாட்டுக்கு வந்தப் பின்னர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் எந்த பேருந்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. காரணம், அதற்கான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. தற்போது, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடங்களுக்குச் செல்லும் சாதாரண பேருந்துகள் மட்டும் தற்போது புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்கின்றன.
ஆனால், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், செக்காரக்குடியிலிருந்து தூத்துக்குடி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எந்த பேருந்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. அவை புதுக்கோட்டைக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. பகலில் மட்டுமன்றி நள்ளிரவு ஆனாலும் இதே நிலை இருப்பதால், வயோதிகர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மாணவர், மாணவிகள் என அனைவருமே பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் இவர்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் பீட்டர், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு அளித்த மனு விவரம்: புதுக்கோட்டை பகுதி மக்களின் போக்குவரத்து பிரச்னை தீர, முதலில், புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அதில் புதிய பாலம் ஒன்றை கட்ட வேண்டும். அடுத்து, தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை புதிய மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து, கீழ கூட்டுடன்காடு பேருந்து நிறுத்தம் மற்றும் அஞ்சல் அலுவலக சாலையை இணைக்கும் வகையில், மேம்பாலத்தின் அடிப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருப்பதுபோல் வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய வழித்தடம் அமைத்தால் போக்குவரத்து சீராகும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கீழகூட்டுடன்காடு பகுதி மக்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லவும், புதுக்கோட்டையிலிருந்து வெளியூர் செல்லவும் மேம்பாலத்தில் கூடுதல் வழித்தடம் மிகவும் அவசியம் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் உணர்ந்து, மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து அதன் அடிப்பகுதியில் புதிய வழித்தடம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டாம்புளி பொதுமக்கள் சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எஸ். சரவணபெருமாள் கூறியது: தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டையில் மேம்பாலம் கட்டிய பிறகு, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. காரணம், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாததுதான்.
இந்நிலையில், புதுக்கோட்டை பழைய பாலத்தை அகற்றிவிட்டு, அதில் புதிய பாலம் கட்டி, அந்த வழியாக பேருந்துகளை புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அளித்தேன். அதனடிப்படையில் ஆய்வு செய்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தப் பாலமானது சிறப்பு அலகுகள் (திட்டங்கள் அலகு, நபார்டு மற்றும் கிராமச் சாலை அலகு, தேசிய நெடுஞ்சாலை அலகு) மூலமாக செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பகுதி மக்களின் போக்குவரத்து பிரச்னை தீர, புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்துவிட்டு அதில் புதிய பாலம் ஒன்றை கட்ட வேண்டும். அடுத்ததாக, தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை புதிய மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து அதன் அடிப்பகுதியில் புதிய வழித்தடம் அமைத்து தர வேண்டும்.
இந்தத் திட்டங்கள் நிறைவேறும் வரை இரு மார்க்கத்தில் இருந்தும் வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல தற்காலிக பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடியாக புதுக்கோட்டை மக்களின் நிலையை நேரடியாக வந்து பார்த்து ஆய்வு செய்து, புதுக்கோட்டை பழைய பாலம் இருக்கும் இடத்தில் புதிய பாலம் கட்டவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தை நீட்டிப்பு செய்து அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
SandalkingNov 16, 2025 - 10:08:33 PM | Posted IP 172.7*****
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்கிறது, அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலங்கள் சரிசெய்ய பட்டாலும் பேருந்துகள் ஊருக்குள் முறையாக வந்து செல்ல அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக திருநெல்வேலி தட தனியார் பேருந்துகளுக்கு.
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)











BabuNov 18, 2025 - 07:59:35 AM | Posted IP 172.7*****