» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாலித்தீன் பைகளில் பார்சல் வழங்க கூடாது : உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை!

சனி 11, அக்டோபர் 2025 10:39:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தெரிவித்து உள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், தண்ணீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கு மாற்று பொருட்களாக வாழை இலை, பாக்குமர இலை, தாமரை இலை, அலுமினியத்தாள், காகிதச்சுருள், துணி, காகிதம், சணல் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பைகள், மூங்கில் மற்றுமு் மரப் பொருட்கள், கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள் உள்ளிட்டவை மாற்று பொருட்களாக அறிவிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகத்தினர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அவ்வப்போது கடைகள், உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியவில்லை. சிறிய கடைகள், டீக்கடைகளில் கேரிபேக், கப்புகள் மற்றும் பாலித்தீன் பைகளில் பார்சல் கட்டுதல் போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் அதிகபட்சமாக அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. 

உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொள்ளும் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாள்களில் பார்சல் கட்டுதல், பிளாஸ்டிக் கப், கேரி பேக் உள்ளிட்டவை பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை அதிகபட்சமாக அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


மக்கள் கருத்து

கந்தசாமிOct 11, 2025 - 11:00:25 AM | Posted IP 172.7*****

நியூஸ் பேப்பர் பார்சலில் அச்சடித்த மையில் கொடிய விஷம் உள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory