» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்துமஸ் விழா கரோல் முன்னேற்பாடு பணிகள் : அமைச்சரிடம் கோரிக்கை!

வியாழன் 9, அக்டோபர் 2025 10:35:14 AM (IST)



தூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கரோல் வாகன கொண்டாட்ட கண்காணிப்புக் குழு தலைவர் அலங்கார பரதர், செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் இக்னேசியஸ் ஆகியோர் அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த வருடம் 2024ல் கிறிஸ்துமஸ் முந்தைய தினமான 24.12.2024 அன்று இரவு தூத்துக்குடி மாநகரில் கரோல் வாகன அணிவகுப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. 

அது போன்று கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்வு தூத்துக்குடியில் ஆங்காங்கே நடந்து வந்தது. கடந்த சில வருடங்களாக கரோல் அணிவகுப்பை மாவட்ட காவல்துறை நிர்வாகம் சீரமைத்தது. அது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் போன வருடம் சில விரும்பத்தகாத நிகழ்ச்சி இந்த கரோல் வாகன அணிவகுப்பில் நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த கரோல் அணிவகுப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகரத்தில் நடந்தாலும் இதை வேடிக்கை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நம் நகருக்கு வருகிறார்கள். நம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் உள்ள மக்களும் இவ்விழாவில் ஆடல், பாடல் என கலந்து மகிழ்கிறார்கள். ஆகவே இந்த நிகழ்ச்சி ஒரு மதம் சார்ந்து நடத்தப்பட்டாலும் பொதுமக்கள் மதங்களைக் கடந்து பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் இந்த கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்கிறார்கள். 

இப்படிப்பட்ட நிகழ்வை அரசும் வரவேற்கும். அது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெறும். மேலும் இந்த விழா இந்தியாவிலேயே கோவாவிலும், தூத்துக்குடியிலும் மட்டும்தான் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது. இப்படிப்பட்ட இந்நிகழ்ச்சியில் போன வருடம் 2024 மாவட்ட காவல்துறையால் நிர்ணயிக்கப்பட்ட சில காவல்துறை அதிகாரிகளின் கவனக்குறைவால் கரோல் வாகன கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற சாலைகளில் பொதுமக்களுக்கு மற்றும் பார்வையாளர்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரம் தடை செய்யப்பட்டது. 

அதற்கு காவல்துறையால் சொல்லப்பட்ட பதில், கரோல் நிகழ்ச்சியில் அவர்கள் அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட பொம்மைகள் மற்றும் காட்சி கட்டமைப்புகள் உயரமாக இருந்தது என்ற கருத்தை முன் வைத்தார்கள். அப்படியானால் மாவட்ட காவல்துறை அதை முன்கூட்டியே கண்காணிக்கவில்லையா என்று கிறிஸ்தவர்களிடமும், பொதுமக்களிடமும் அந்த கேள்வி எழும்பியது. திடீரென்று எந்தவித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் தடை செய்ததால் பெண்களுக்கான பாதுகாப்பு, நகை திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு இருந்தது.

ஆகவே இந்த வருடம் எந்த குறைபாடும் ஏற்படாமல் இருக்கவும், மேலும் இவ்விழாவில் சில சிறப்புகள் செய்து கொடுக்கவும், எங்கள் தூத்துக்குடி மாநகர கரோல் கொண்டாட்ட கண்காணிப்புக்குழு அமைச்சருக்கு, சில முன் ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை வைக்கிறது. இந்த கோரிக்கையை ஏற்று இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை சிறப்பு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனா். கரோல் வாகன கொண்டாட்ட கண்காணிப்புக் குழு நிர்வாகிகள் ரூஸ்வால்ட், ஜோசப் மணி, விஜயன், பெசில் கோஸ்தா, செல்வம், பெனிட்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

IndianOct 9, 2025 - 04:10:52 PM | Posted IP 172.7*****

True

MAKKALOct 9, 2025 - 12:06:21 PM | Posted IP 162.1*****

தயவு செய்து இது போன்ற விழாக்கள் நடக்க அனுமதி வழங்காதீர்கள். இந்த விழா நடைபெறுவதால் கூட்ட நெரிசல் காரணமாக நாங்கள் ஆலயத்திற்கு போக இயலாமல் இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஆலயத்திற்கு மிகவும் தாமதமாக போக நேரிடுகிறது. இது போன்ற ரோடு ஷோ நடைபெறுவதால் அங்கு நடனநிகழ்ச்சி நடைபெறுகிறது. போதை வஸ்துகள் (மாத்திரைகள், கஞ்சா மற்றும் மதுபானங்கள்) அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. அநேக இளம் தலைமுறையினர் இந்த அடிமைதனத்திற்கு அன்றையதினம் அடிமையாகின்றனர். கிறிஸ்து பிறப்பு என்பது மக்களின் பாவத்திற்காக பிறந்தார். ஆனால கிறிஸ்து பிறப்பை வைத்தே பாவத்தை செய்கிறார்கள். ஆகவே இதை கருத்தில் கொண்டு இந்த விழாக்கள் நடத்த அனுமதி அரசு கொடுக்கக்கூடாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory