» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடால் பக்தர்கள் பாதிப்பு - இந்து முன்னணி குற்றச்சாட்டு
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:01:56 PM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடால் பக்தர்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் 14 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மாதம் மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. சுமார் 400 கோடிகள் செலவு செய்து வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்த திராவிட மாடல் அரசில் தான் இவ்வாறு கும்பாபிஷேகம் செய்துள்ளோம் என்று மார்தட்டி செய்தியாளர்கள் மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார். இந்த பணிகள் யாவும் பக்தர்களின் பங்களிப்பால் நடைபெற்றுள்ளது. வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டியது திமுக அரசு.
ஆனால் இன்று வரை இக்கோவிலின் வேலைகள் முழுமை பெறாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. தங்களது சுய விளம்பரத்திற்காக எவ்வித வேலைகளையும் முழுமையாக முடிக்காமல் அவசரகதியில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். கோவில் கும்பாபிஷேகம் என்பது அனைத்து பணிகளும் முடிந்து பின்னர் செய்ய வேண்டும் என்பது மரபு. ஆனால் அதனை இந்து சமய அறநிலையத்துறை கவனத்தில் கொள்ளவில்லை. இத்தகைய நிலையை குறித்து கார்ப்பரேட் நிறுவனம் போல அவசரகதியில் கும்பாபிஷேகத்தை நடத்தியதை சென்னை உயர்நீதிமன்றமும் கடிந்து கருத்து தெரிவித்தை சுட்டிக் காட்டுகிறோம்.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜையில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் பக்தர்கள் வரிசையில் எவ்வாறு உள்ளே தரிசனத்திற்கு அனுப்புவது என்பதிலும் தெளிவான ஏற்பாடு இல்லாமல் இருக்கிறது.
பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் மூத்த குடிமக்கள் வரிசையில் வரும் பக்தர்களையும் கோவில் உள்ளே நுழைந்த உடன் ஒரே வரிசையாக இணைத்து அனுப்புகின்றனர். இதனால் கடும் நெரிசல் சிக்கி பக்தர்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். இதனால் பல மணி நேரம் வரிசையில் நின்றும் சுவாமி தரிசனம் செய்யாமலேயே பல நூறு குடுபங்கள் தினசரி வீடு திரும்பும் நிலையும் ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்ற நபர் மூச்சு விட அவதிப்பட்டு மரணமடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, வரிசையினை முறையாக நெறிப்படுத்தி விடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, நேற்று கேரள மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்களிடம் ஒரு நபர் தரிசனம் செய்வதற்கு 11 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நான்கு நபர்களுக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட காணொளிகளும் அனைத்து செய்தி ஊடகங்களில் வந்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல, நாள்தோறும் இது போல் பல முறைகேடுகள் கூறித்து காணொளிகள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமே உள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருந்து, முறைகேடாக கட்டணம் வாங்கிக் கொண்டு தரிசனத்துக்கு வரும் பக்தர்களை குறுக்கு வழியில் அனுப்புகின்றனர். இதற்காக தனியாக சில வாட்சப் குரூப் இயங்குவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இதுநாள் வரை இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளோ அல்லது இத்துறை அமைச்சரோ இதை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முறையாக எடுக்கவில்லை. இனியேனும் இது போன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருக்கோவிலின் நுழைவாயிலில் கடந்த ஒரு வார காலமாக சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதனை மிதித்து தான் கோவிலுக்குள் செல்லும் அவல நிலை உள்ளது. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் காணொளிகளாக சமூக வலைதளங்களில் ஒரு வார காலமாக பதிவிட்டு வருகின்றனர். குழந்தைகள், முதியோர் என பல லட்சம் பக்தர்கள் இதனால் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
ஆனால் இன்று வரை நகராட்சி நிர்வாகமோ அல்லது இந்து சமய அறநிலையத்துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் பக்தர்கள் கூறும் புகார்கள் மீது உடனடியாக விசாரிப்பதற்கு IAS அதிகாரி தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
திருச்செந்தூர் கோவில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் இதுபோல் நடைபெறும் செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நேற்று திருத்தணியிலும் இதுபோல் சம்பவம் நடந்து இன்று பல ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவமதிப்பது, அடாவடி வசூல், போலி தரிசன கட்டண ரசீது மூலம் கொள்ளை அடிப்பது ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். இதை எதையுமே கண்டு கொள்ளாமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஏதோ கனவு உலகில் இருந்து கொண்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் அனைத்துமே சிறப்பாக நடைபெறுவதாகவும் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாகவும் தினமும் பேசி வருவது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது .
கோவிலில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படாமல் அங்கு வரும் பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:35:30 PM (IST)

ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, டிசம்பர் 2025 7:56:03 PM (IST)

கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ரணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி துவக்கம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:36:34 PM (IST)

பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)










