» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!

சனி 5, ஜூலை 2025 4:23:49 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதில் இலட்ச கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவிற்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், திருக்கோயில் குடமுழுக்கை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி அகன்ற திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு, 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் நடத்திய இந்து சமய அறநிலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் திருச்செந்தூர் திருக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு லட்சக்கணக்கான உணவு பொட்டலங்கள் தயாரித்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், குடமுழுக்கு விழா பணிகளுக்காக மூன்று இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் இன்றிலிருந்து கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு விழா எல்லா வகையிலும் சிறப்புடன் நடைபெறும்.

சாதாரணமாக திருக்கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் குடமுழுக்கு நடைபெறும். திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. 07.07.2025 தொடங்கி 05.08.2025 வரை 30 நாட்கள் மண்டல பூஜையோடு திருக்கோயில் திருவிழாவும் தொடங்குகின்றது. ஆகவே திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு இந்த நாட்களில் பக்தர்கள் எப்போது வந்து தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்ளுகின்ற புண்ணியம் கிடைக்கும்.

திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் 06.07.2025 பகல் 12.00 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு 07.07.2025 அன்று திருக்குடமுழுக்கு நிறைவு பெற்ற பின், இத்திருக்கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் மரபு மற்றும் கடந்த குடமுழுக்குகளின் பழக்க, வழக்கங்கள், பாராம்பரிய நடைமுறைகளின்படி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகங்கள், எண்வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூசைகள் நடைபெறும். அதற்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

மேலும், அன்னதானம் வழங்குவதற்கு முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம். வழங்குகின்ற அன்னதானத்தை பரிசோதிப்பதற்கு அன்னதான பரிசோதனை குழு ஒன்றை அமைத்திருக்கின்றோம். எங்களின் நோக்கம் வழங்கப்படுகின்ற அன்னதானத்தால் அதனைப் பெற்று அருந்துகின்ற பக்தர்களுக்கு எந்த விதமான உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதுதான் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory