» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடையில் மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : பாஜக கோரிக்கை

புதன் 19, மார்ச் 2025 3:24:03 PM (IST)

அரசூர் பகுதியில் மூடிவைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் விடுத்துள்ள கோரிக்கை மனு : தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கடைகோடியில் உள்ள அரசூர் ஊராட்சியானது கிட்டத்தட்ட இருபத்திமூன்று கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிக அளவில் மக்கள்தொகையை கொண்டுள்ள இந்த ஊராட்சிப்பகுதியில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், பேருந்து உள்ளிட்ட வசதிகள் இல்லாமலும், அதேபோன்று இங்கு தேவையான அளவு அரசுநிலங்கள் இருந்தும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத காரணத்தினால் இப்பகுதியைச் சார்ந்த மாணவ மாணவிகள் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு பேருந்து வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இவ்வாறு இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்வராத மாவட்ட நிர்வாகம் பல குடும்பங்களை சீரழித்து எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை எந்தவித குற்ற பின்புலம் இல்லாத அமைதியான பகுதியாக அறியப்படும் அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியார் பண்ணையில் அமைத்து வேகவேகமாக மதுபான பெட்டிகளை லாரிகளில் கொண்டுவந்து இறக்கி விற்பனையை துவங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

இப்பகுதியைச் சார்ந்த பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆங்காங்கே உள்ள அவர்களின் விவசாய நிலங்களில் குடிசை அமைத்து தங்கி பாரம்பரிய முறையிலான விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சம்பவம் போன்று இங்கு நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த கடைக்கு வரும் மதுபோதை கும்பல்களால் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காகவும், இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கடையை திறக்க கூடாது என்று, பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் எங்களது கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து தீர்வுகாணப்படும் என்றும் அதுவரை கடைதிறக்கப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பாஜக சார்பில் நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

அதன்பின்பு பல நாட்கள் ஆகியும் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரையில் எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையை திறந்து விடுவார்களோ? என்ற பதற்றம் இப்பகுதி மக்களிடையே நிலவிவருகிறது. மேலும் இந்த மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை குறிவைத்து சில மர்மநபர்கள் மிரட்டல் விடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையின் தீவிரத்தை கருதில் கொண்டு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உறுதி அளித்ததின்படி, இந்த செட்டியார் பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபான கடையை திறக்கும் எண்ணத்தை கைவிட்டு வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை உடனடியாக அப்புறப்படுத்தி அப்பகுதி மக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory