» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்: ஆட்சியர் தலைமையில் பயிற்சிக் கூட்டம்!
வெள்ளி 29, நவம்பர் 2024 8:35:05 PM (IST)
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக வளாகத் தூதுவர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.11.2024) மாவட்டத்தில் 01.01.2025 ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2025-ஐ முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக வளாகத் தூதுவர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களை விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், 17 வயது நிரம்பிய வாக்காளர்கள் முன் விண்ணப்பம் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பம் செய்வது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் செய்வது தொடர்பாக பயிற்சியும் வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஒரு நாள் பயிற்சிக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 50 கல்லூரிகளைச் சேர்ந்த வளாகத் தூதுவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் என சுமார் 93 நபர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.