» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விரால் மீன்களின் இனப்பெருக்கம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி!
புதன் 13, நவம்பர் 2024 5:32:17 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன்வளர்ப்புத் துறையில் "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த 56 பயனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும் கல்லூரியில் உள்ள மீன்வளர்ப்பு பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டு சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம் ஆகியவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) நீ.நீதிச்செல்வன் பயிற்சியில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடி இப்பயிற்சியின் வாயிலாக பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்று ஊக்குவித்தார். மீன்வளர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் அ. அனிக்ஸ் விவேக் சந்தியா, இப்பயிற்சியை ஒருங்கிணைத்து விரிவாக நடத்தினர்.