» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் : மேயர் பங்கேற்பு
புதன் 13, நவம்பர் 2024 4:18:01 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மேயர்ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறைதீர் கூட்டத்தில் மேயர் பேசியதாவது: கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் குறைதீர் முகாம் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் போன்றவைகள் உடனடியாக மாற்றம் செய்து வழங்கப்படுகிறது. இதுவரை 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 சதவீதம் மனுக்களுக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கும் விரைந்து தீர்வு காணப்படும்.
தற்போது மாநகராட்சியில் 206 பூங்காக்கள் உள்ளன. மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான 40 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கபடி, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்கிள் ஓடை 6 கி.மீ. சீரமைக்கப்பட்டு 11 வழித்தடங்கள் மூலம் மழைநீர் கடலுக்கு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதில், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் சுப்பையா, மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.கனகராஜ், சந்திரபோஸ், விஜயலட்சுமி, பொன்னப்பன், ராமர், கந்தசாமி, ஸ்ரீனிவாசன்(எ)ஜாண், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.