» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு
செவ்வாய் 12, நவம்பர் 2024 8:39:19 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடர்பாக மணப்பாடு, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், காயல்பட்டிணம் மற்றும் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடற்கரையை கிராமங்களாகக் கொண்ட மணப்பாடு, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், காயல்பட்டிணம் மற்றும் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் இன்று(12.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாரம்பரியமான ஒரு மாவட்டமாகும். இங்கு கிராமங்களும் கடற்கரை கிராமங்களும் குறிப்பாக மிக அதிகம். அதன்படி இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், காயல்பட்டிணம் மற்றும் முள்ளக்காடு போன்ற பகுதிகளுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி மேற்கொள்வதற்கு குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், திருச்செந்தூரில், சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடற்கரையை கிராமமாகக் கொண்ட சுற்றுலாத்தளமான மணப்பாடு (சிலுவைக்கோவில்) மூன்றுபக்கமும் கடலால் சூழப்பட்டு ஒரு தீபகற்பம் போல காட்சியளிக்கிறது.
குலசேகரன்பட்டினத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரைப் பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் குறித்தும், திருச்செந்தூர் - கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்த குலசேகரன்பட்டணம் உடன்குடிக்கு கிழக்கே 5 கிமீ தொலைவிலும் திருச்செந்தூருக்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அருள்தரும் முத்தாரம்மன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் குலசேகரன்பட்டிணத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான ஆன்மிக தலமாகும். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக நடத்தப்பட்டுவரும் பக்தர்கள் தங்கும் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பக்தர்கள் தங்கும் விடுதியினை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, வங்க கடலின் ஓரமாக அமைந்துள்ள சிறப்பு மிக்க ஒரு ஊர் காயல்பட்டிணம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். வியாபார நகரமாக விளங்கி வருகிறது. இங்கு கடற்கரை மிகவும் நீளமாக வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், முள்ளக்காடு கடற்கரைப் பகுதியை கடல்நீர் சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலாத் தலமாக ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்களுடன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், காயல்பட்டணம் நகர்மன்ற தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மது ஆலிம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாலசிங், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் உமரிசங்கர், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன், அரசு அலுவலார்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.