» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் பதுக்கிய 16 மூட்டை ரேஷன் அரிசி, மாவு பறிமுதல்: 2 பேர் கைது!
திங்கள் 11, நவம்பர் 2024 8:20:48 AM (IST)
கோவில்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 16 மூட்டை ரேஷன் அரிசி, ரேஷன் அரிசி மாவை போலீசார் பறிமுதல் செய்து 2பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இனாம் மணியாச்சி பஞ்சாயத்து அத்தைகொண்டான் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கோவில்பட்டி தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் அத்தை கொண்டானில் சந்தேகத்திற்கு இடமான ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டை ரேஷன் அரிசிமாவும், தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டை ரேஷன் அரிசியும் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்து இருந்த அத்தைகொண்டானை சேர்ந்த ராமமூர்த்தி (52), அவருக்கு உதவியாக இருந்த முருகன் (46) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரேஷன் அரிசி, மாவு மூட்டைகள், மோட்டார் சைக்கிள்களுடன் அந்த 2 பேரையும் தனிப்பிரிவு போலீசார் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.