» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது!
திங்கள் 11, நவம்பர் 2024 8:18:15 AM (IST)
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கஞ்சா, புகையிலை பொருட்கள், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் கோவில்பட்டி செல்லப்பாண்டி நகர் பகுதியில் நேற்று மதியம் கிழக்கு போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள காந்தாரி அம்மன் கோவில் அருகே வெள்ளை நிற சாக்கு பையுடன் நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட ஆரம்பித்தார்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்த போது, அதில் 30 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
அவர் தொடர்ந்து அந்த பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் கோவில்பட்டி புது ரோடு, பெருமாள் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்தி என்ற கட்ட கார்த்தி (24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.