» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உயர்மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்து தீப்பிடித்தது: 2 வீடுகளில் மின்சாதனங்கள் சேதம்!
திங்கள் 11, நவம்பர் 2024 8:01:31 AM (IST)
சன்னதுபுதுக்குடியில் உயர்மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்ததில், 2 வீடுகளில் மின்சாதனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் ஆனது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடியில் மேட்டுபிரான்ேசரி செல்லும் சாலை ஓரத்தில் மாடசாமி, கண்ணன் ஆகியோரது வீடுகள் உள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் இக்கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மேட்டுபிரான்சேரிக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படும் உயர்அழுத்த மின்கம்பி தீடீரென அறுந்து விழுந்தது.
இந்த மின்கம்பி மாடசாமி, கண்ணன் ஆகிேயாரது வீடுகளுக்கு செல்லும் மின் வயர் மீது விழுந்ததில், அதிக மின்சாரம் பாய்ந்ததில், வீடுகளுக்குள் இருந்த மின்சாதனங்கள், சுவிட்சு போர்டு உள்பட மின்ஒயர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த, அந்த வீட்டில் இருந்த 5 பேர் வெளியே ஓடி தப்பினர். மேலும், அந்த சம்பவத்திற்கு சில நொடிகளுக்கு முன்னதாக அந்த வழியாக சென்ற லாரி, மின்விபத்தில் இருந்து தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் மின்வாரியத்தினர் அங்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின்கம்பியை மாற்றி அமைத்தனர். மின்வாரியத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அந்த வீடுகளில் எரிந்த தீயை அணைத்தனர். அதேசமயம் அந்த 2 வீடுகளிலும் மின்ஒயர்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதனால் அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.