» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தில் 850 மையங்களில் தேர்வு : 8,077 பேர் எழுதினர்!
திங்கள் 11, நவம்பர் 2024 7:54:47 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், 800 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 8 ஆயிரத்து 77 பேர் பங்கேற்றனர்.
தமிழக அரசு பள்ளிக் கல்வி துறையின், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடப்புக் கல்வி ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதோரை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிட புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தினார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எழுதப் படிக்கத் தெரியாத 8 ஆயிரத்து 77 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் 850 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு, கல்வித் தன்னார்வலர்கள் மூலம் கடந்த 9-ந் தேதி வரை அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற 8 ஆயிரத்து 77 பேருக்கும் இறுதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இந்த தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 850 எழுத்தறிவு மையங்களில் நடந்தது. எழுத்தறிவு மையங்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இதில் முதியவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்த தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், உதவித்திட்ட அலுவலர், பள்ளித் துணை ஆய்வாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணித்தனர்.