» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ரூ.1¾ கோடி கடன் உதவி : ஆட்சியர் இளம்பகவத் தகவல்
ஞாயிறு 10, நவம்பர் 2024 5:47:54 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 176 தொழில் முனைவோருக்கு ரூ.1¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு : வாழ்ந்து காட்டுவோம் திட்டம்(2.0) என்பது ஊரக வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கிராமப் புறத் தொழில்களை ஊக்குவித்தல், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வேலைவாய்ப்பினை உருவாக்குதல்,
மகளிர் தொழில்முனைவோர் மூலம் கிராமப்புறங்களில் நிலையான தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களிலுள்ள 120 வட்டாரங்களில் உள்ள 3994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 வட்டாரங்களிலுள்ள (சாத்தான்குளம் தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி கருங்குளம்) 105 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுவரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு மானியமாக தொழிற்கடனுதவி வழங்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.10.2024 வரை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், ஒரு ஊராட்சியில் குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் அதாவது வாழை, வெற்றிலை, காய்கறிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட விளைபொருட்களை உற்பத்தி செய்துவரும் விவசாயிகளை 30 முதல் 150 வரை ஒருங்கிணைத்து 88 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு தலா ரூ.75,000 வீதம் முழுமானியமாக ரூ.66 இலட்சம் துவக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
அதுபோன்று கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்துவரும் நபர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 10 முதல் 30 வரை ஒருங்கிணைத்து 24 தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழுவிற்கு தலா ரூ.75,000 வீதம் முழுமானியமாக ரூ.18 இலட்சம் துவக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றி வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து 02 உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டு முழுமானியமாக ரூ.46.50 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக 80 சமுதாய திறன் பள்ளி உருவாக்கப்பட்டு இதுவரை 1685 இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று ஒவ்வொரு கிராமங்களில் உள்ள விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் சாகுபடி செய்து, அதிக இலாபம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கில் 206 சமுதாய பண்ணைப் பள்ளி உருவாக்கப்பட்டு இதுவரை 6214 விவசாயிகள் பயிற்சி பெற்று பயன்பெற்றனர்.
கிராமப்புற ஊராட்சிகளில் தொழில் முனைவோரை மேம்படுத்தும் விதமாக இணை மானியத் திட்டத்தின்கீழ் தொழில் முனைவோர்க்கு 30 சதவீதம் மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி 176 தொழில் முனைவோர்களுக்கு மானியமாக ரூ.1.73 கோடி தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொழில் கடனுதவி பெற்ற தொழில் முனைவோர்களுக்கு தொழில் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் சுயதொழில் செய்துவரும் மகளிர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை தொழில் கடனாக வழங்கப்படுகிறது.
அதன்படி 271 மகளிர்களுக்கு ரூ.1.51 கோடி தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது ஆகமொத்தம் 8006 பயனாளிகளுக்கு ரூ.1,30,50,000/- முழு மானியமாகவும், 176 தொழில் முனைவோர்களுக்கு 30 சதவிகித மானியத்தில் ரூ.1,73,00,000/- தொழில் கடனுதவிகளும், 271 மகளிர்களுக்கு ரூ.1,51,00,000/- தொழில் கடனுதவிகளும், சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணைப் பள்ளி மூலமாக 7700 பயனாளிகளுக்கு ரூ.2,29,66,200/- செலவில் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.