» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை
ஞாயிறு 10, நவம்பர் 2024 12:10:55 PM (IST)
பசுவந்தனை அருகே காட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள சில்லாங்குளம் பரமன் பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகன் (40), இவர் 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனது தந்தை முத்துசாமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முத்துசாமிதனக்கு சொந்தமான நிலத்தை பேரன் பெயருக்கு எழுதி வைத்து விட்டாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தனது தந்தை முத்துசாமி தன் பெயருக்கு சொத்து எழுதாமல் பேரனுக்கு கொடுத்து விட்டார் என்ற ஆத்திரத்தில் கடந்த மூன்றாம் தேதி அவரை சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அவர் பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சில்லாங்குளம் - சரவணபுரம் ரோட்டில் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக பசுவந்தனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு இறந்து கிடந்தது முருகன் என்று தெரியவந்தது.
அவரது உடல் அழுகி விட்டதால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடந்தது. போலீசார் கைதுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து பிணத்தை இங்கு போட்டார்களா என பசுவந்தனை இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.