» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வஉசி துறைமுகத்தில் மாதங்கி ரோந்து படகிற்கு வரவேற்பு!
திங்கள் 4, நவம்பர் 2024 11:00:59 AM (IST)
மும்பையில் இருந்து கடந்த அக்.29ஆம் தேதி புறப்பட்ட மாதங்கி என்ற ஆளில்லா தானியங்கி ரோந்துப் படகு, தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்துக்கு வந்தடைந்தது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய கடற்படையின் சாகர்மாலா பரிக்ரமா திட்டத்தின் கீழ் ஸ்டார்ட்அப் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, சாகர் டிபன்ஸ் என்ஜினீயரிங் நிறுவனம், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புதுமையான ரோந்துப் படகை வடிவமைத்துள்ளது.
மாதங்கி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்துப் படகு, முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக் கூடியது. சவாலான கடல் நிலைமைகளை நிர்வகிக்கவும், அதிக போக்குவரத்து உள்ள கடல் வழிகளில் பாதுகாப்பான பாதையையும் உறுதி செய்கிறது.
இந்த ரோந்துப் படகு, மும்பையில் இருந்து கார்வார் வரை சுமார் 600 கிமீ தூரத்தை ஏற்கெனவே வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பையில் இருந்து தூத்துக்குடி வரை 1,500 கிமீ தூர பயணத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி மூலம் கடந்த அக்.29ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த ஆளில்லா ரோந்துப் படகு, இன்றுதிங்கள்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. அப்போது துறைமுக ஆணைய துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.