» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாசனத்திற்காக திறக்காமல் ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது : பாஜக குற்றச்சாட்டு!

வியாழன் 3, அக்டோபர் 2024 5:06:32 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் போதிய அளவில் நீர்வரத்து இருந்தும் மருதூர் மேலக்கால் கீழக்கால் வழியாக பாசனத்திற்காக நீர்திறக்கப்படாமல் வீணாக ஆற்றுநீர் கடலில் கலந்து வருகிறது என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி  தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரானது பாசனத்திற்காக மருதூர் மேலக்கால் வழியாக சென்னல்பட்டி, தத்தநேரி, வசவப்புரம், விட்லாபுரம், முத்தாலங்குறிச்சி நாட்டார்குளம், ஆதாழிகுளம், செய்துங்கநல்லூர், கருங்குளம், தூதுகுழி புளியங்குளம், கால்வாய், வெள்ளுர், தென்கரை, பெரியகுளம், முதலாம்மொழி, புதுகுளம், பிள்ளையன்விளைகுளம், கீழபுதுக்குளம், வெள்ளகுளம், தேமாங்குளம் போன்ற குளங்களுக்கு பாய்ந்து விவசாயநிலங்களுக்கு குளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதியை அளித்துவருகிறது இந்த மருதூர் மேலகால்.

அது மட்டுமல்லாமல் இந்த குளங்கள் எல்லாம் நிரம்பிய பிறகு வெளியேறும் உபரிநீர் செங்குளம், உடையார்குளம், பொட்டல்குளம், சடையநேரி, முதலூர்ஊரணி, வைரவன் தருவைகுளம், புத்தன்தருவைகுளம் போன்ற குளங்களுக்கும் பாய்ந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யது வருகிறது. 

அதேபோல் மருதூர் கீழக்கால் வழியாக பாயும் நீரானது கலியாவூர், மணக்கரை, தோழப்பன்பண்னை, பத்மநாபமங்களம், இசவன்குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, ஸ்ரீமூலக்கரை, பேரூர்குளம், பராக்கிரம பாண்டியன்குளம், சிவகளைகுளம், பெருங்குளம் போன்ற குளங்களுக்கும் நேரடிபாசனமாக 16 கி.மீ அளவில் பாய்ந்து ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் ஏக்கர் விவசாயநிலங்களுக்கு பாசனவசதி அளித்து வருகிறது.

இந்த நீர் ஆதாரத்தை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் கார், பிசானம், முன்கார் என முப்போகமும் சாகுபடிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதய பிசான சாகுபடி பருவகாலம் என்பதால் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை பாசனத்திற்காக நீரை திறப்பது வழக்கம். 

அணைகள் மற்றும் தாமிரபரணி ஆற்றில் போதிய அளவில் நீர்வரத்து இருந்தும் இதுவரையில் மருதூர் மேலக்கால் கீழக்கால் வழியாக பாசனத்திற்காக நீர்திறக்கப்படாமல் வீணாக ஆற்றுநீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் பாசனத்திற்கான பயன்படுத்தும் குளங்கள் தற்போது வரை நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் பிசான சாகுபடிக்கான ஏற்பாடுகளை செய்துவந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும்பாலான குளங்கள் கால்வாய்கள் சேதமடைந்ததால் அதற்கான சீரமைப்பு பணிகளை கடந்த ஏப்ரல் 2024-க்குள் முடிக்க பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்த நிலையில் அதைபற்றி எதுவும் கண்டுகொள்ளாது அலட்சிய போக்குடன் முறையான திட்டமிடுதல் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு மேலாக எந்தவித சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் இருந்த பொதுபணித்துறையின் செயல்பாடு மிகவும் கண்டனத்திற்குரியது.

இப்படியாக ஆறு மாதகாலமாக கால்வாய்கள் மற்றும் மடைகளை சீரமைக்காமல் பொதுபணித் துறையானது மெத்தனமாக இருந்து விட்டு தற்போதைய பிசான சாகுபடிக்கான பருவகாலத்தில் கால்வாய்கள் மற்றும் மடைகளை சீரமைப்பதாக கூறி பாசனத்திற்கான நீரை திறந்து விடாமல் வீணாக கடலில் கலக்கவிட்டு வருகிறது.

டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் எல்லாம் அழிந்து பெரும் பொருளாதாதார பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயப் பெருமக்கள் இந்த ஆண்டு பிசான சாகுடியில் தாங்கள் அடைந்த நஷ்டத்தில் சிறிதளவேனும் சரிசெய்துவிடலாம் என்று இருந்த நிலையில் பொதுப்பணித்துறையின் அலட்சியபோக்கு விவசாயப் பெருமக்களின் வாழ்கையை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த பிசான சாகுபடிக்கான பருவமான அக்டோபர் மாதத்தில் சாகுபடி செய்யாமல் பருவம் தவறி பயிர்செய்தால் போதிய விளைச்சல் இருக்காது என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மெத்தனபோக்கை கடைபிடித்துவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தங்களது நேரடிப்பார்வையில் போர்க்கால அடிப்படையில் விரைந்து கால்வாய்கள், மடைகள் மற்றும் பாசனம் தொடர்பான பகுதிகளை சீரமைக்கவும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் பிசான சாகுபடியில் ஈடுபடுவதற்கான போதிய உதவிகளை விரைந்து செய்துதர வேண்டும் என்றும, மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் பிசான சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்கி விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

AnanthOct 4, 2024 - 08:59:40 AM | Posted IP 172.7*****

Very True

கந்தசாமிOct 3, 2024 - 05:14:15 PM | Posted IP 172.7*****

விவரம் இல்லாமல் ஊளருகிறார் கடலில் கலக்கவில்லை

அது மட்டுமல்லOct 3, 2024 - 05:09:40 PM | Posted IP 162.1*****

திராவிட ஆட்சியில் ஆறே சாக்கடையாக மாறுகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education





Thoothukudi Business Directory