» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
திங்கள் 9, செப்டம்பர் 2024 8:30:49 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (09.09.2024) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 386 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்டு, மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளான குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா முதல் பரிசுத்தொகை ரூ.6000, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.4500, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.3500 என மொத்தம் வெற்றி பெற்ற 15 மாணவர்களுக்கு ரூ.70,000க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 27 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.