» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செல்போன்களை பறித்த 2பேர் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்
புதன் 4, செப்டம்பர் 2024 8:00:42 PM (IST)
தூத்துக்குடியில் செல்போன்களை பறித்து சென்ற 2பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் செல்போன் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்திநகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பு மகன் தினேஷ்குமார் (24) என்பவர் கடந்த 25.08.2024 அன்று ரோச் பூங்கா பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் அனிபா மரைக்காயர் (24) மற்றும் தாளமுத்துநகர், லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் சதீஷ் (19) ஆகியோர் என்பதும் மேற்படி தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து சென்றதும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் அனிபா மரைக்காயர் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 40,000 மதிப்புள்ள 4 செல்போன்கள் மற்றும் செல்போன் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.