» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கன்னியாகுமரியில் கண்ணாடி தரைத்தள பாலம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

புதன் 4, செப்டம்பர் 2024 5:24:52 PM (IST)



கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக திருவள்ளுவர் சிலை முதல் அதன் வலது பக்கத்திலிருந்து எதிரே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையில் கண்ணாடி இழை தரைத்தள நடைப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, ஆகியோர் முன்னிலையில், இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உலகமே போற்றுகின்ற விதத்திலே கன்னியாகுமரி கடலின் நடுவிலே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையினை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வழிவகை செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டமானது அணைகள், கடற்கரை பகுதிகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டம் என்பதால் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள். மேலும், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையில் ஒரு தியான மண்டபம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் அய்யன் திருவள்ளுவர் சிலையினையும் இணைக்கும் கடல்சார் பாலப்பணி மற்றும் இறங்குதள பணிகளுக்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினேன். பொதுப்பணித்துறை சார்பாக கூடுதலாக படகுகள் வந்து நிற்பதற்காக ரூ.33.80 கோடி மதிப்பில் 100 மீட்டர் நீளம் கொண்ட இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு இறங்கு தளம் அமைவதால் எதுவும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு, மீனவர்களுக்கு எந்தவிதமாக பாதிப்பும் ஏற்படாது என்றார்கள். இறங்குதளம் அமைந்த பின் 3 கப்பல்கள் வந்து நிற்கும் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு பெற்று, ஜனவரி மாதம் சுற்றுலா பயணிகள்ள உள்ளிட்ட அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து பார்த்துவிட்டு செல்லும் நிலைதான் இருந்தது. படகின் காலம், நேரம் கருதியும், படகை இயக்குவதற்கான இடைப்பட்ட பொருளாதார விரயத்தை கருத்தில் கொண்டும், மத்திய, மாநில அரசு இதற்கு பாலம் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் விவேகானந்தர் பாறை முதல் திருவள்ளுவர் சிலை இணைக்ககூடிய பாலத்தினை ரூ.37 கோடி மதிப்பில் 77.00 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார்கள். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் செல்லும் போது முக்கடலின் அழகினை பார்க்க வேண்டுமென்ற அடிப்படையிலும், கடலின் சீற்றத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும் கடின தன்மை கொண்ட கண்ணாடி தரைத்தள பாலம் (கடல்சார் பாலம்) அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருவள்ளுர் சிலை பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு, திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. RDSO (ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு) அங்கீகரிக்கப்பட்ட M/S மெட்டல் ஸ்கோப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், பாண்டிசேரி நிறுவனத்தில் ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகிய கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று, Network Arch முழுமையாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது.


மேலும் முழுமையாக பொருத்தப்பட்ட எஃகு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள எஃகு அலகுகள், இருபுறமும் அமைந்துள்ள கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தப்படும். எஃகு அலகுகளை பொருத்துவதற்கான அடித்தள பணிகள் முடிந்து, அனைத்து பணிகளும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாலம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

நடைபெற்ற ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர்.தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), தொழில்நுட்ப சிறப்பு அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயராணி, சாந்தி, தலைமை பொறியாளர் பன்னீர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்க பிள்ளை, பாபு, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory