» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 5:24:42 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் மாவட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் இன்று (01.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் உட்புகுவதை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு காண்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பேச்சிப்பாறை அணையில் இருந்து பழையாற்று வழியாக வரும் தண்ணீரை உரிய வழியில் பாதுகாப்பது குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. குறிப்பாக சுசீந்திரம் வழியாக செல்லும் தண்ணீரானது, தாழ்வான பகுதிகளில் செல்வதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தாழ்வான பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வடக்கு தாமரைகுளம் வழியாக செல்லும் பழையாற்றில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் உள்ளதால் சூரியஒளி தண்ணீருக்குள் ஊடுருவுவதற்கு பெரும் தடையாக இருக்கும். மேலும் மற்ற நீர்வாழ்தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். எனவே ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முற்றிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுருளக்கோடு வழியாக பழையாறு செல்லும் வாய்க்காலினை பார்வையிட்டு, அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களிடம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளச்சேதம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து வரும் தண்ணீர் புத்தன் கால்வாய் வழியாக தாமிரபரணி, பழையாறு, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளில் செல்வது குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது.
மேலும் திற்பரப்பு அருவினை நேரில் பார்வையிட்டதோடு, அருவியில் நீர்வரத்து அதிகளவு வரும் போது, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகையினை தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் எச்சரிக்கை பாதகைகள் வைத்திட பேரூராட்சி செயல் அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டதோடு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் ஏற்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சிற்றாறு I, சிற்றாறு II அணைகளின் நீர் இருப்பு குறித்தும் துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். ஆய்வுகளில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள் பிரைட், வட்டாட்சியர்கள் மூர்த்தி (அகஸ்தீஸ்வரம்), ஜீலியன் ஹீவர் (விளவங்கோடு), சரளாகுமாரி (பொ) (திருவட்டார்), உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி, தாணுமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.