» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொடர்பு முகாமில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்.
புதன் 10, ஜூலை 2024 5:37:42 PM (IST)
ஈத்தாமொழி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட அம்மச்சியார் கோவிலூர், அம்பாள் திருமணமண்டபத்தில் இன்று (10.07.2024) நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகையில்:-
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் முதற்கட்ட முகாம்கள் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, இரண்டாம் கட்ட முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டம், இாஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஈத்தாமொழி அம்மச்சியார் கோவிலூர், அம்பாள் திருமணமண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறுவதே ஆகும்.
குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்திசெய்வதே ஆகும். பெறப்பட்ட மனுக்களில் அதிகளவில் வீட்டுமனை பட்டா மனுக்கள் வந்துள்ளது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ மாணவிகள் உயர்கல்வி பெற முன்னோடி வங்கிகள் மூலம் கல்விக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட சமூகநலத்துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக புதுமைப்பெண்திட்டத்தின் மூலம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்மை செய்ய தேவையான இயந்திரங்கள், உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன்.
மேலும் தோட்டக்கலை துறையின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பழ செடி தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விதமாக காய்கறி பழ வகை தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை துறை மூலம் வெள்ளாடு, செம்மறியாடு, கோழி குஞ்சுகள், பசுதீவனத்தாள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு நலத்திட்ட உதவிகள், நலத்திட்டங்கள், மானியவிலை திட்டங்கள் உள்ளிட்ட வாய்ப்புகளை பொதுமக்களாகிய நீங்கள் கேட்டறிந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து கடன்உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை இதுபோன்ற முகாம்கள் வாயிலாக பொதுமக்கள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 1 பயனாளிக்கு ரூ.135 மதிப்பில் நெல் நுண்ணூட்ட உரமும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வரப்பு பயிர் உளுந்து விதை திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு 1 ஹெக்டர் பரப்பளவுக்கு ரூ.300 மானியத்தில் 5 கிலோ உளுந்து விதையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நல்ல மிளகு பரப்பு விரிவாக்கத்திற்காக 1 பயனாளிக்கு 0.5 ஹெக்டர் பரப்புக்கு ரூ.10,000 மானியமும், மாநில தோட்டகலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை பரப்பு விரிவாக்கத்திற்காக 2 பயனாளிகளுக்கு ரூ.22,800 மானியமும், தென்னை வேர் வாடல் நோய் மேலாண்மை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 34,312.50 மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்க அரங்குகளை பார்வையிட்டார்கள். மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஆதிதிராவிட நலத்துறை, வேலைவாய்ப்பு துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், அந்த நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக பெறுவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்கள் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதர், இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மைத்துறை), மரு.இராதாகிருஷ்ணன் (கால்நடை பாராமாரிப்பு துறை), துணை இயக்குநர் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜென்கின் பிராபாகர், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.